பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த உமர் குல், தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தான் தேசிய ரி-20 கிண்ண தொடர், முடிந்ததும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ராவல்பிண்டியில் தெற்கு பஞ்சாப் (பாகிஸ்தான்) அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடும் பலூசிஸ்தான் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
தனது ஓய்வு குறித்து 36 வயதான உமர் குல், டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
‘மிகவும் கனமான இதயத்துடனும், நிறைய சிந்தனைகளுக்கும் பிறகு, இந்த தேசிய ரி-20 கிண்ண தொடருக்குப் பிறகு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற முடிவு செய்துள்ளேன்’ என பதிவிட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் பாகிஸ்தான் அணிக்காக இறுதியாக 2016ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.
உமர் குல், பாகிஸ்தான் அணிக்காக 47 டெஸ்ட் போட்டிகள், 130 ஒருநாள், 60 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2002ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண தொடரில் விளையாடிய உமர் குல், 2003ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்டில் கடைசியாக 2013ஆம் ஆண்டு விளையாடினார். ஒருநாள், ரி-20 சர்வதேச போட்டிகளில் கடைசியாக 2016ஆம் ஆண்டு விளையாடினார்.
2007ஆம் ஆண்டு ரி-20 உலகக் கிண்ண தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக இருந்தார். அதேபோல 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி ரி-20 உலகக் கிண்ண தொடரில் வென்றபோதும் அதே பெருமை அவருக்குக் கிடைத்தது.