மக்களின் பலம் அரசின் பக்கம் இருக்கும் வரை ஐ. தே. கட்சியின் சூழ்ச்சிகள் ஒரு போதும் வெற்றிபெறப் போவதில்லை. பல தோல்விகளைச் சந்தித்துள்ள ஐ. தே. கட்சி எதிர்வரும் தேர்தலிலும் தோல்வியைத் தழுவும் என்பது அவர்களுக்கே தெரிந்த விடயம்.
யுத்த நிலைமை பற்றி பொய் வதந்திகளை எழுப்பி வந்த இக்கட்சியினருக்கு இன்று தேர்தல் மேடைகளில் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை என பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். யுத்தத்தை வியாபாரமாகவும் அரசியலை இலாப மாகவும் கருதி செயற்பட்ட ஐக்கிய தேசிய கட்சி இன்று வலுவிழந்து காணப்படுவதற்கு காரணம் அவர்களது சூழ்ச்சிகளாகும். இக்கட்சியின் பொய்ப்பிரசாரங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை.
எதிர்வரும் தேர்தலில் இரண்டு மாகாண சபைகளிலும் பாரிய வெற்றியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஈட்டும் என கல்கமுவ வன்னிநாயக்க விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்தார்.
அமைச்சர் பந்துல பஸ்நாயக்க தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் மேலும் பேசிய பிரதமர், யுத்த களத்தில் உள்ள படைவீரர்களை சக்தி மிக்க தாக்கி அவர்களுக்கு போதிய பலத்தை வழங்கி யுத்தம் புரிவதால் எல். ரீ. ரீ. ஈ.யினருக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற முடிந்துள்ளது. ஐ. தே. கட்சியினர் போன்று நாமும் யுத்தத்தை வியாபாரமாக்கி அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்தவில்லை.
எனினும் இன்று யுத்தத்தில் வெற்றிபெற்று வரும் நிலையை சகிக்காத சிலர் அரசிற்கு எதிரான பெரும் சூழ்ச்சியொன்றை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. யுத்தத்தை நிறுத்தி அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளை சிதறடிக்க எடுக்கப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கு அரசு திடமாக நடவடிக்கை எடுக்கும். எதிர்வரும் தேர்தல்களில் அரசு நிச்சயம் வெற்றிபெறும். மக்களின் ஆணை அரசின் பக்கமேயுள்ளது.
இவ்வாண்டு முற்பகுதியில் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் தோன்றி நாடு அபிவிருத்தியின் பக்கம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தும் முல்லைத்தீவில் இன்னும் எஞ்சியுள்ள பகுதிகள் அடுத்த ஒருசில வாரங்களில் மீட்கப்படும்.
வடமேல் மாகாணத்தில் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாண்டுக்குள் தொடங்கப்படவுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.