Saturday, September 18, 2021

கொரோனா அபத்தமும் – சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களமும் !

ஐக்கிய அமெரிக்காவின்  ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில்  விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் இந்தத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.  இந்தத்தேர்தலின் முடிவுகள் எவ்வாறு இருக்கப்போகின்றன என்று உலகநாடுகள் ஒவ்வொன்றும்  எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.

அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தல் வேட்ப்பாளராக களமிறங்கும் ஆசிய-அமெரிக்கப்பெண் | lankapuri

இந்தத் தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.  அதேபோல் துணை ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி உள்ள மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

வழமையான ஜனாதிபதி தேர்தல்களைப் போலன்றி இந்தவருட தேர்தலில் கொரோனா பரவல் தொடர்பான விடயங்களே அமெரிக்க தேர்தலின் அதீத பேசு பொருளாகியுள்ள நிலையில் வேகமாக அமெரிக்காவில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டமையே அவர் மீது முன்வைக்கப்படும் மிகப்பெரிய குற்றமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொதுத்தேர்தலை நடாத்துவது என்பதே கடினமான ஒரு செயலாக காணப்பட்ட போதிலும் கூட அதை வெற்றிகரமாக நடாத்திய ஒரு சில நாடுகளில் கொரோனா பரவலை முறையாக கட்டுப்படுத்திய தலைவர்களை மீள மக்கள் ஆட்சியில் அமர வைத்துள்ளமையை காணமுடிகின்றது. இலங்கை , நியூசிலாந்து போன்ற நாடுகளில் இதனை மிக நன்றாக காணமுடிந்தது. அது மட்டுமன்றி கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய தலைவர்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் வலுவடைந்து வருவதையும் சமகால அரசியல் தெளிவாக காட்டிநிற்கின்றது.

இந்நிலையில் இந்த வருட அமெரிக்க தேர்தல் பிரச்சார மேடைகளில் கொரோனா பரவலை ட்ரம்ப் கட்டுப்படுத்தவில்லை என்ற தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டியவராகிறார் ட்ரம்ப். குறிப்பாக மக்கள் மத்தியில் பிரசன்னமாகுகின்ற போதோ அல்லது கூட்டத்தொடர்களின் போதோ கூட முகக்கவசம் அணியாது அவர் கலந்து கொண்டமையானது எந்தளவு தூரம் இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிவிட்டார் என்பதை காட்டுகின்றது. இன்றைய திகதிக்கு 83 இலட்சத்துக்கு மேற்பட்ட அமெரிக்கர்கர்கள் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொரோனாவால் இறந்துபோயுள்ளமையானது தேர்தல் வெற்றியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

அது மட்டுமன்றி ஜோர்ஜ்பிளைட் எனும் கறுப்பினத்தவர்  கொலைசெய்யப்பட்டமையும் – அது நிறவெறிவாத போராட்டமாக வெடித்த பின்னணியும் ட்ரம்பினுடைய தேர்தல் வெற்றியை பாதித்துள்ளமையை மறுத்து விட முடியாது. இதனை மிகச்சரியாக கையாண்ட ஜனநாயகக்கட்சியினர் தங்களுடைய கட்சியின் துணைஜனாதிபதி வேட்பாளராக ஆபிரிக்க – இந்திய வம்சாவழி அமெரிக்கரான கமலாஹாரிஸை நியமித்துள்ளமை ஜனநாயகக்கட்சிக்கு இன்னும் வலுச்சேர்ப்பதை காணக்கூடியதாகவுள்ளது. மேலும் அமெரிக்காவாழ் ஆபிரிக்க வம்சாவழியினரின் வாக்குகள் என்ற விடயத்துடன் அமெரிக்கா வாழ் இந்தியவம்சாவழியினரின் வாக்குகளும் ஜனநாயயகக்கட்சியின் பக்கம் குவிவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ளது. இதனை மிக தந்திரோபாயமாக ஜனநாயககட்சியினர் அணுகுவதையும் அவதானிக்க முடிகின்றது. தேர்தலின் வேட்பாளர்கள் இந்தியாவில் நவராத்தரி தினத்துக்கும் – விநாயகர் சதுர்த்திக்கும் போட்டி போட்டு  வாழ்த்து தெரிவிக்குமளவிற்கு இந்த தேர்தல் அமெரிக்காவாழ் வெளிநாட்டவர்களின் வாக்குகளை எதிர்பார்த்து நிற்பதை காட்டுகின்றது.

நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்தனர் அமெரிக்க அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்

இது ஒருபுறமிருக்க அமெரிக்காவின் முன்னாள் தலைவர்கள் பலருடைய ஆதரவும் கூட ஜோபைடன் பக்கமே இருப்பதையும் காணமுடிகின்றது. பில் கிளின்டன் மற்றும் ஜிம்மி காட்டார், அதேபோன்று முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பொவல், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் கிலாரிகிளின்டன்  ஆகியோரும் தமது ஆதரவை ஜோபைடனுக்கு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்தப்பட்டியலில் புதிதாக “அக்டோபர் 21 ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பென்சில்வேனியாவில் ஜோ பைடனுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்” என்ற செய்தியும் உத்தயோக பூர்வமாக வெளியாகியுள்ளமையானது ஜனநாயகக்கட்சியின் பக்கத்தை மேலும் பலப்படுத்துவதாக உள்ளது. அண்மையில் பிரித்தானிய அரசும் ஜோபைடனுக்கு சார்பான போக்கினை கடைப்பிடிப்பதாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருந்தமையானது ஜனநாயகக்கட்சி வலிமையாக இருப்பதை காட்டுகின்றது.

இதே நேரத்தில் டொனால்ட் ட்ரம்பும் தன்னுடைய பக்கத்தை,  தேர்தலில் தன்னுடைய வகிபாகத்தை மிகச்சரியாக நகர்த்துவது போலவே படுகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் டொனால்ட் ட்ரம்பிற்கும் அவருடைய அமைதி ஒப்பந்தத்திற்கும் கிடைத்த வெற்றியானது ட்ரம்பின் வெளிநாட்டுக்கொள்கைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். குறிப்பாக இஸ்ரேல் – பக்ரைன், இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ட்ரம்பின் நகர்வுகள் ட்ரம்பை சமாதானப்பிரியராக அடையாளம் காட்டியுள்ளமையானது ட்ரம்பின் தேர்தல் நகர்வுகளில் கனிசமான செல்வாக்கு செலுத்தவுள்ளது.

மத்தியகிழக்கு நாடுகளில் அமைதியான முகத்தை காட்டிவரும் ட்ரம்ப், அமெரிக்கா என்னும் வல்லாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்துவது போன்றதான விம்பம் ஒன்றையும்  தன்னுடைய தேர்தல் அரசியலில் நகர்த்துகின்றார். ஜோபைடனை அமெரிக்காவின் கைக்கூலியாக காட்டிவரும் ட்ரம்ப் சீனாவிற்கு எதிரான பல பொருளாதாரத்தடைகளை விதித்தமையினையும் சீனாவை கட்டுப்படுத்துவதையும் தன்னுடைய பெரிய சாதனையாக அடையாளப்படுத்த தவறவில்லை. தன் மீது சுமத்தப்பட்ட கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை மிக இலாவகமாக சீனாவின் திட்டமிட்ட சதிதான் கொரோனா என்ற மாயவலையால் மூடிவிட்டார் ட்ரம்ப் என்பது போலவே ஒரு பக்கம் தோன்றுகின்றது.

trump-announces-peace-deal-between-bahrain-and-israel

வடகொரியாவுடனான அணுஆயுதப்பிரச்சினையை முறையாக கையாண்டு அமைதி ஒப்பந்தம் ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டமை, மத்தியகிழக்கு நாடுகளில் சமாதானத்தூதுவனாக பணியாற்றியமை,   இந்தியாவுடனான அரசியல் நகர்வுகளிலும் ஓரளவுக்கு தன்னை நிலைநிறுத்திக்கொண்டமை என பல வெளிநாட்டு நகர்வுகளில் ட்ரம்ப் மகத்தான வெற்றிகளை பதிவுசெய்துள்ளமை அவருடைய தேர்தல் வெற்றியிலும் தாக்கம் செலுத்தும்.

“அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே சொந்தமானது” என தீவிர பிரச்சாரத்தை இந்த தேர்தலிலும் ட்ரம்ப் முழுமூச்சாக கையிலெடுத்துள்ளார். அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தொடங்கி அனைத்திலும் முன்னுரிமை அமெரிக்கர்களுக்கு வழங்க வேண்டும் என்ற தீவிர பிரச்சாரத்தை ட்ரம்ப் முன்வைத்து வருவது அவருடைய பக்கம் கனிசமான அமெரிக்கர்கர்களை ஈர்த்து வைத்திருக்கும் என்பதை காட்டுகின்றது.  மேலும் வழமை போல கொமினியூச எதிர்ப்பையும் தன்னுடைய கையில் எடுத்துள்ள ட்ரம்ப் “ஜனநாயக கட்சியினர் அமெரிக்காவை கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற விரும்புகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டையும் தீவிரமாக முன்வைத்து வருகின்றமையும் முதலாளித்துவ கோட்பாட்டை விரும்பும் ஒருதொகை  அமெரிக்கர்களை திருப்திப்படுத்த முனைவதை தெளிவாக காட்டுகின்றது.

இந்த நிலையில் அமெரிக்காவின் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தல் பற்றி குறிப்பிட்டுள்ள ட்ரம்ப் “ அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றுவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவன் ‘ என குறிப்பிட்டுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் ஜனநாயகக்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள கொரோனா தொடர்பான பழியிலிருந்து மீண்டு ட்ரம்ப் மீள ஆட்சியமைப்பாரா..? அல்லது ஜோபைடனின் நகர்வுகளும் அரசியல் அனுபவங்களும் வெற்றி பெறப்போகின்றனவா என்று….!

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *