சாதிய ரீதியான பாரபட்சத்தால் கோயிலில் தேவாரம் பாட மாணவனுக்கு அனுமதி மறுப்பு !

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது ஆலய நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது பிள்ளையாளர் ஆலயம் ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான காணொளியும் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

குறித்த ஆலயத்தில்  காலை எட்டு மணிக்கு நவராத்திரி பூசைஇடம்பெற்று வருகிறது. இதன்போது அங்கு செல்லும் சிறுவனின் குடும்பத்தினரும் பூசை வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம் ஆனால் குடும்பத்தினரை ஆலய நிர்வாகத்திற்கு வந்தவர்கள் பல வழிகளில் புறக்கணித்தே வந்துள்ளனர்.

இவர்களால் ஆலயத்திற்கு நேர்த்திக்காக பூ மாலை கொண்டுசென்றால் அதனை மூலஸ்தான சுவாமிக்கு அணிவிக்காது. வெளியில் உள்ள சுவாமிக்கு அணிவிப்பது. ஆலயத்திற்குள் உள்ள மணியை அடிக்கவிடுவதில்லை எனத் தொடர்ந்த பாரபட்சம் தற்போது அக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் தேவாரம்பாடுவதற்கு சென்ற போது பாடவிடாது தடுத்து நிறுத்திய ஆலய நிர்வாக சபையின் தலைவர், சிறுவனை ஆலயத்திற்கு வெளியே செல்லுமாறு கூறி வெளியேற்றியுள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுவனும் அவனது குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர். சாதிய ரீதியான பாரபட்சமே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் தலைவரிடம் வினவிய போது ஆலயத்தில் பாரபட்சம் எதுவும் இல்லை எனவும், தேவாரம் பாடுவதற்கு இங்கு நிர்வாகத்தில் ஒருவர் (பெண்) நியமிக்கப்பட்டுள்ளார் அவர் தான் பாடவேண்டும் எனவும் தெரிவித்த அவர் இங்கு நிர்வாகம் எடுப்பது தீர்மானம் எனவும் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் தாங்கள் ஆலயத்தில் தேவாரம் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே ஆலயநிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தெரிவித்தள்ளனர். அத்தோடு குறித்த சிறுவன் க.பொ.த.உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் எனடபதும் குறிப்பிடத்தக்கது.

விடயம் தொடர்பான பிரச்சினைக்கு அப்பால் இங்கு இதுபோன்ற சாதிய பிரச்சினைகள் இன்னமும் எரிந்துகொண்டுதான் இருக்கின்றன. பாடசாலை மாணவனிடம் தேவாரம் படிக்காதே எனத்தடுக்குளமளவிற்கு இந்தச்சமூகம் தரம்தாழ்ந்து போயுள்ளது என்பதே உண்மை. வெளிப்படையாக சாதிய ரீதியான தாழ்வுகள் பிரச்சினைகள் இல்லை என ஆளாளுக்கு மார்தட்டிக்கொண்டாலும் கூட இன்னமும் இது போன்ற பிரச்சினைகள் சமூகத்தின் ஆழத்தில் இது போன்ற எத்தனையோ மாணவர்களை உளவியல் சார்ந்து ஒடுக்கிக்கொண்டுதான் இருக்கின்றது.

மாற்றத்துக்காக ஒவ்வொருவரும் முன்வராத வரை இந்தச்சாதிய பிரச்சினையும் புற்றுநோய் போலத்தான் நமது சமூகத்தை எரித்துக்கொண்டேயிருக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *