சாவகச்சேரி – கச்சாய் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரி- கச்சாய் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு நேற்று (18.10.2020) இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
குறித்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸார் குறித்த வீட்டினை சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டனர். இந்த சுற்றிவளைப்பின்போது யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 31 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், குறித்த இளைஞன் வவுனியா பேருந்து நிலையத்தில் சாதாரண ஊழியராக பணியாற்றுவதாகவும் யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் பிரதான சந்தேகநபராக தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.