1200 வீடுகள் முழுமையாக பூர்த்தி: மார்ச்சில் ஜனாதிபதியால் கையளிப்பு

sarath-amunugama.jpgஅரசாங்க ஊழியர்களுக்கு ஐயாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டமொன்றை பொதுநிர்வாக அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதில் சுமார் 1200 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு முதலில் ஹபராதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 576 வீடுகளும் மார்ச் மாதம் ஜனாதிபதியினால் அரச ஊழியர்களுக்கு கையளிக்கப் படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம கூறினார்.

அரசாங்க ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது. அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டவாறு அரசாங்க ஊழியர்களுக்கு வீடுகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஹபராதுவ பகுதியில் 576 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மூன்று தரத்திலான வீடுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் ஜனாதிபதியினால் அரச ஊழியர்களுக்கு கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர காலி வெகுனுகொடையில் 640 வீடுகள் அமைக்கப்பட்டு வருவதோடு பூர்த்தியடையும் நிலையில் உள்ளன.

கண்டி, குண்டசாலை பகுதியில் சுமார் 900 வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதோடு சில தினங்களில் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க உள்ளோம்.

ராகம பகுதியில் சுமார் 800 முதல் 900 வரையான வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளோம். இதற்கான காணியை சுவீகரிக்க கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியது. அரசாங்கமும் மலேசிய ‘வின்கொண்ட்’ கம்பனியும் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிக்க உள்ளன.

5000 வீடுகளையும் நிர்மாணிக்க 50 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது.

வரலாற்றில் ஒரு போதும் அரசாங்க ஊழியர்களுக்கென இந்தளவு அதிகமான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது கிடையாது. வீடமைப்பு அமைச்சிற்குப் போட்டியாக அதிக மான வீடுகள் நிர்மாணிக்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இதேவேளை, கொழும்பு கெப்பிட்டிபொல மாவத்தையில் 16 மாடிகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. அத்தோடு 80 மாடிகளைக் கொண்ட வீடமைப்பு த்திட்டமொன்று பத்தரமுல்லையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா கம்பனியொன்று நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அரசாங்க ஊழியர்களுக்கான வீடுகளை வங்கிக் கடன் அடிப்படையிலா வேறு வகையிலா வழங்குவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஹபராதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் எந்த நிமிடமும் கையளிக்கக்கூடிய நிலையில் உள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *