சர்வதேச கிறிக்கட் கட்டுப்பாட்டுசபையின் (ICC) நேர அட்டவணைப்படி இந்தக்காலகட்டங்களில் இந்திய கிறிக்கட் அணியினர் பாக்கிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், மும்பாய் தாக்குதலையடுத்து இச்சுற்றுப் பயணம் தடையானது.
இந்நிலையில் 3 ஒரு நாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பாக்கிஸ்தானுடன் விளையாட இலங்கை அணி விருப்பம் தெரிவித்தது. அதேநேரம், இலங்கைக்கான 5 ஒரு நாள் போட்டிகளிலும் 20க்கு 20 போட்டியொன்றிலும் கலந்துகொள்ள இந்தியா அணி இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளது.
மஹெல ஜயவர்தன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளது.
இலங்கை வீரர்களுக்கு வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாகவே சமீபகாலமாக பாகிஸ்தானில் விளையாட எந்த அணியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டில் பாக்கிஸ்தானில் பாதுகாப்பு நிலைமையைக் காரணம் காட்டி அவுஸ்திரேலியா அணி முதலில் பயணத்தை ரத்து செய்தது. அதன் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் பாக்கிஸ்தானில் நடைபெற இருந்த சம்பியன் கிண்ணப் போட்டி தள்ளி வைக்கப்பட்டது.
பாக்கிஸ்தானுக்கு இந்தியா அணி செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்றிருந்த நேரத்திலே மும்பாய் தாக்குதல் இடம்பெற்றது. மும்பாய் தாக்குதலையடுத்து இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தது.
இந்நிலையில் தற்போது இலங்கை அணி அங்கு சென்று உள்ளது.
பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி கராச்சியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை நடக்கிறது. 2 வது போட்டி நாளை (21) (புதன்கிழமை)யும் 3 வது மற்றும் கடைசி போட்டி 24 ஆம் திகதியும் (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த 3 ஒரு நாள் போட்டிகளும் பகல் – இரவாக ஆட்டங்களாக நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
3 ஒரு நாள் போட்டிகளும் முடிவடைந்த பின்பு இலங்கை அணி தாயகம் திரும்பவுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்திய அணியுடன் இலங்கையில் 5 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி ஆடவுள்ளது. அத்துடன், 20க்கு 20 போட்டியொன்றும் இந்திய அணிக்கெதிராக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான போட்டிகள் இம்மாதம் 28ஆந் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 10ஆந் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்திய அணி இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பாக தமிழ் நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பினைக் காட்டி வருகின்றது. இலங்கையில் நடைபெறும் யுத்த நிலைமை காரணமாக இந்திய அணி இலங்கைக்குச் செல்லக் கூடாது என ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
இறுதியாக கடந்த 19ம் திகதி இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியை அணியை அனுப்பக்கூடாது என்று பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தினர். பா.ம.க.வின் அங்கமான வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் சென்னை ஐகோர்ட்டு முன்பு நடத்தப்பட்டது. சமூகநீதி பேரவை தலைவர் கே.பாலு வக்கீல்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் வக்கீல் எம்.பழனிமுத்து உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கைக்கு, இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பக்கூடாது என்றும், இலங்கையில் நடைபெறும் போரை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு கேடா என்றும், இந்திய கிரிக்கெட் வாரியம் பணம் கொழிக்க தமிழன் செத்து மடியும் இலங்கைதான் கிடைத்ததா? என்றும், அப்பாவி தமிழன் செத்து மடிகிறான், அங்கே கிரிக்கெட் விளையாட்டு ஒரு கேடா’ என்றும் பல கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்கள் எதையும் இந்திய கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இந் நிலையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெறும் வீரர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல் ஒருநாள் போட்டி 28 ஆம் திகதி தம்புள்ளையில் நடக்கிறது. இதற்கான இந்திய அணித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடந்தது. தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையிலான குழுவினர் வீரர்களை தேர்வு செய்தனர். அணி விபரம் வருமாறு; வீரேந்திர ஷேவாக், கௌதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், தோனி (கப்டன்)இ யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, யூசப்பதான், சகீர்கான், இஷாந்த் சர்மா, ஓஜா, முனாப் பட்டேல், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிரவீன் குமார். காயம் காரணமாக ஹர்பஜன் சிங் இடம்பெறவில்லை.
25 ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள், ஒரு 20 ஓவர் போட்டி என மொத்தம் 6 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்தியாவுடனான ஒரு நாள் தொடர் முடிந்த பிறகு இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தான் செல்லவுள்ளது. மீண்டும் பாக்கிஸ்தான் செல்லும் இலங்கை அணி பாக்கிஸ்தான் அணிக்கெதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த கிரிக்கட் போட்டிகளில் இலங்கை பாக்கிஸ்தானில் சுற்றுலா மேற்கொள்வது குறித்து ஆரம்பத்தில் இந்திய தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் பலத்த கண்டனம் தெரிவித்தமை ஞாபகமிருக்கலாம்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவால் மறுக்கப்பட்ட ஒரு போட்டி தொடரில் இலங்கை அணி கலந்துகொள்வதினூடாக இலங்கை அரசாங்கத்துக்கும், பாக்கிஸ்தான் அரசாங்கத்துக்கும் இடையில் யுத்த உறவுகள் இருப்பதாக கூறியே இந்த கண்டனங்கள் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டன. இந்த கண்டனங்கள் எதையும் இந்தியாவின் மத்திய அரசோ, இந்திய கிரிக்கட் வாரியமோ கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய கிரிக்கட் அணி இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.