சிரச ஊடக வலையமைப்பின் கட்டிடத் தொகுதி தாக்குதல் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைதான ஐவர் நேற்று திங்கட்கிழமை நுகேகொட நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். விசாரணையின் முடிவில் ஐந்து பேரையும் சரீரப் பிணையில் செல்வதற்கு நுகேகொட நீதிவான் வஸந்த ஜினதாஸ அனுமதித்தார். நடத்தப்பட்டுவரும் விசாரணையை கருத்தில் கொள்ளும் போது சம்பவம் தொடர்பான கவனத்தை பொலிஸார் வேறு திசைக்கு மாற்ற முயல்வதாக நீதிவான் குறிப்பிட்டார்.
கணிசமான அளவுக்கு வெளிநாடுகள் கவனத்தை ஈர்த்துள்ள இச்சம்பவம் ஏன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக விசாரணை நடத்தப்படவில்லை என பொலிஸாரிடம் நீதிவான் வினவியதாக சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிஸங்க நாணயக்கார தெரிவித்தார்.