பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (20.10.2020) இடம்பெற்ற நவராத்திரி விழா நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் பிரதமரின் குடும்பத்தார் உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
வழிபாட்டு நடவடிக்கைகளுடன் இலங்கை இந்திய சமுதாய பேரவையினால் வழங்கப்படும் பாடசாலை மாணவர்கள் ஆறு பேருக்கான புலமைப்பரிசில்களும் பிரதமரினால் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மத அனுட்டானங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
‘நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற பயணத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆரம்பித்திருக்கின்றோம். சட்டத்தை மதிக்கும் குணநலம் கொண்ட ஒழுக்கநெறியான சமூகம் ஒன்றினை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கவேண்டும்.
இந்தச் சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அவர்களுக்கான மத அனுட்டானங்களைச் சரிவரப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். இந்நாட்டில் இப்பொழுது, மக்களுக்குத் தமது மத அனுட்டானங்களைப் பின்பற்றுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எமது தாய் நாடான இலங்கை உட்பட, உலகில் எங்கெங்கெல்லாம் இந்துக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் நவராத்திரி விரதம் மற்றும் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன. இந்துக்கள் அனைவரும் தாயாக போற்றுகின்ற சக்தியைப் போற்றி வழிபடும் நிகழ்வு ஒன்பது நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
நவராத்திரி விரதம் பார்ப்பதற்கு ஒரு கொண்டாட்டம் போல இருந்தாலும் ஒரு விரதமாகவே அனுட்டிக்கப்படுகிறது. அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும் மனத்திடத்தோடு துணிவைத்தரும் மலைமகளையும் செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு.
ஒன்பது தினங்களின் பின்னர் பத்தாவது நாள் மிகவும் விசேடமான தினமாகும். அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாகவும் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் அன்னை மகாசக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் திருநாளாகவும் பத்தாவது நாள் ‘விஜயதசமி’ திருநாள் அமைகின்றது.
இது அர்த்தமுள்ள நல்லதொரு பூஜை வழிபாடு, ‘கொலு’ வைப்பது இந்த வழிபாட்டில் சிறப்பான ஒரு விடயம். இந்த உலக உயிர்கள் எல்லாமே எல்லோர்க்கும் மேலான சக்தியாலேதான் இயங்குகின்றன என்ற உண்மையை எங்களுக்குக்குச் சொல்லுகிறது.
ஆலயங்கள், பாடசாலைகள், நிறுவனங்கள், வீடுகள் என எல்லாத் துறைகளிலும் ‘கொலு’ வைத்து வழிபடும் இந்த நிகழ்வால் நாட்டில் சுபீட்சமும் சகவாழ்வும் இனிதே மலரட்டும் என பிரார்த்திப்போம். இன்று நம் தேசத்தில் மூன்றாவது அலையாக எழுவதற்கு எத்தணித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை கொரோனா. இது மக்களிடையே ஒரு பய உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய பயங்கள் ஆன்மீக பலத்தினாலேதான் வெல்லப்பட வேண்டும். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் முடிந்தளவு முயற்சித்து வருகின்றோம்.
இவ்வாறான இக்கட்டான சந்தர்ப்பத்திலும் இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கி சமய விழுமியங்களை பாதுகாப்பதற்கு முன்வந்துள்ளோம். இதுவரை இருந்த இந்து அமைச்சர்கள் நவராத்திரி விழாவை தங்களது வீடுகளிலிருந்து கொண்டாடினர். அந்த இந்து அமைச்சர்கள் போன்று நானும் நவராத்திரியை இந்து மத சம்பிரதாயங்களுக்கு ஏற்ப அனுஷ்டிக்கவுள்ளேன்.
இந்த நவராத்திரி தினத்தில் கொரோனா தொற்று இல்லாதொழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து ‘உங்கள் எல்லோருக்கும் நவராத்திரி தின வாழ்த்துக்கள்’ என தமிழ் மொழியில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.