வடமராட்சி கிழக்கு மற்றும் வன்னியில் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து தென்மராட்சிக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 1,796 பேர் வந்துள்ளதாக யாழ். செயலக புனர்வாழ்வுத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில்167 குடும்பங்களைச் சேர்ந்த 440 பேர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கல்லூரி இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியிலுள்ள திருநகர் இடைத்தங்கல் முகாமில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 416 குடும்பங்களைச் சேர்ந்த 1,296 பேர் மிருசுவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் அருகாமையிலுள்ள தேவாலயக் கட்டிடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மூன்று நாட்களுக்கு சமைத்தஉணவு வழங்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார். அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், பாய்கள்,அரிக்கன் லாம்புகள்,உடுதுணிகள், பாவனைப் பொருட்களை வழங்கி வருகின்றன. அகதிகள் வருகை அதிகரித்து வருவதால் இடைத்தங்கல் முகாம்களை அமைப்பது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்து அரசசார்பற்ற நிறுவனங்களுடன் யாழ். செயலகத்தில் நேற்று அவசர சந்திப்பொன்றையும் அரசஅதிபர் நடத்தியுள்ளார்.