இலங்கை – அமெரிக்க பரஸ்பர ஒத்துழைப்பு செயற்பாடுகளால் அண்டை நாடுகளுக்கு பாதிப்பில்லை

sl-parlimant.jpgஇலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர ஒத்துழைப்பு செயற்பாடுகள், அண்டைய நாடுகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாதென்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தெற்காசிய நாடுகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் அமெரிக்கா ஏவுகணைத்தளம் அமைப்பதற்கு இடமளிக்கப் படமாட்டாதென்றும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர், அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் பிராந்தியத்திற்கான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொனற் தலைமையிலான தூதுக்குழுவினர், கிழக்கில் பாடசாலைகளைப் புனரமைக்கவும், பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்காதிருக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இலங்கை வந்ததாகக் கூறினார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் எதுவும் கிடையாது.

பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பான பரஸ்பர ஒத்துழைப்பு, சேவை பரிமாற்றம் தொடர்பாகவே பாதுகாப்புச் செயலாளருக்கும், அமெரிக்கத் தூதுவருக்கு மிடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.  இது குறித்த கலந்துரையாடல்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் நோக்கில்தான் மேஜர் ஜெனரல் கொனற் தலைமையிலான குழுவினர் கடந்த ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை வந்தார்கள். ஜே. வி. பி.யினர் கற்பனை செய்யும் காரணங்களுக்காக அவர்கள் இலங்கை வரவில்லை இவ்வாறு 89 நாடுகளுடன் அமெரிக்கா உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.

கிழக்கில் சமூக, பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் பாதுகாப்புத்தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்று தெரிவித்த அமைச்சர் போகொல்லாகம, ஜே. வி. பி. உறுப்பினர் அனுரகுமார எழுப்பிய கேள்விகளுக்குத் தனித்தனியாகவும் பதில் அளித்தார்.

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் பிராந்தியத்திற்கான கட்டளைத் தளபதியொருவர் என்ன நோக்கத்திற்காக இலங்கை வந்தார். எப்போது வந்தார், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் ஆற்றும் பணிகள் யாவை, எப்போது திருப்பிச் செல்வார்? என்றெல்லாம் அனுரகுமார எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இதற்கு மேலும் பதிலளித்த அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, பாடசாலைக் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக வந்தார்கள். 14 ஆம் திகதி மாலைதீவு சென்று மீண்டும் வந்தார்கள். 18 ஆம் திகதி நாடு திரும்பிவிட்டார்கள். வேறு எந்த இராணுவ செயற்பாடுகளுக்கும் அவர்கள் இலங்கைக்கு வரவில்லை. அதேநேரம், பயங்கரவாதத்திற்கு எதிராக எந்தவொரு சர்வதேச நாட்டுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இலங்கை தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *