அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில் , காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். இன்று வவுனியாவில் காணாமல் போனவர்களினால் மேற்கொள்ளப்படும் போராட்ட பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமெரிக்க வெளிவிவகார செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் வன்னியில் நடந்த இனப் போரின்போது, 25,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். நாங்கள் 1347 வது நாளாக ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு என உண்ணாவிரதம் இருக்கிறோம். எங்கள் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் வரை எங்கள் உண்ணாவிரதம் தொடர்கிறது. எங்கள் குழந்தைகளை தடுப்புக்காவல் மற்றும் பிற மறைவிடங்களிலிருந்து அழைத்து வர வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு இலங்கை தவறிவிட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. துன்பப்படும் இந்த தமிழ் தாய்மார்களுக்கு உதவ உங்கள் நல்ல அலுவலகத்தைப் பயன்படுத்துமாறு செயலாளரை நாங்கள் தயவாக கேட்கிறோம். என தெரிவித்தார்.