திருகோணமலைக்கு அண்மையிலுள்ள தீவுகளில் ஏவுகணைகளைப் பொருத்துவது குறித்து அமெரிக்க இராணுவக்குழு கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. இது தொடர்பான உண்மை நிலையை அரசாங்கம் வெளியிடவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை விடுத்து உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
அவ்வறிக்கை வருமாறு:-
அமெரிக்க இராணுவத்தினர் பசுபிக் பிராந்தியத்துக்கான கட்டளை குழுவொன்று தற்போது இலங்கை வந்திருப்பதாகத் தெரியவருகிறது. மேஜர் ஜெனரல் தோமஸ் எல். கொனன்ட்டின் தலைமையில் வந்திருக்கும் இந்த குழுவில் தெற்காசிய நாடுகள் தொடர்பான இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் பெட்ரிகோ, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கமாண்டர் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோர் அடங்குகின்றனர்.
இவர்கள் திருகோணமலையை மையமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களது வருகையின் நோக்கம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த கிழக்குமாகாண மக்களின் மீள்குடியேற்றல் மற்றும் புனரமைத்தல் தொடர்பான விடயங்கள் எனக்கூறப்படுகிறது. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களை புனரமைப்பதற்காக இராணுவ அதிகாரிகளை இங்கு அனுப்புவதன் நோக்கம் என்ன வென்று புரியவில்லை.
இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் யுத்த நடவடிக்கைகளுக்காக இலங்கையைப் பயன்படுத்தும் திட்டம் இருந்தது. இலங்கையில் அமெரிக்க ஏவுகணைகளை திருகோணமலையில் பொருத்தும் முயற்சியொன்று 1978ல் மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் அது வெற்றியளிக்கவில்லை. 1985ல் மீண்டும் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து முகாமொன்றை அமைக்க அமெரிக்கா முயற்சித்தது. மக்கள் எதிர்த்தமையால் அது கைவிடப்பட்டது.
அதே போன்று, தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக “பிரம்ம புத்திர திட்டம்” என்ற பெயரில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.” வி. யி. தி அமைப்பினால் தயாரிக்கப்பட்ட இத்திட்டத்தில், திருகோணமலை துறைமுகம், அமெரிக்க இராணுவத்தை நிலை நிறுத்தக் கூடிய பூமியாக குறிக்கப்பட்டிருந்தது. ஆகவே, அமெரிக்காவின் யுத்த திட்டங்களில் திருகோணமலை முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.
ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவானதன் பின்னர் இலங்கைக்கும் அமெரிக்கா வுக்குமிடையில் பாதுகாப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அதில் இலங்கையின் சார்பில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும், அமெரிக்காவின் சார்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும் ஒப்பமிட்டனர்.
அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் செய்து கொண்ட இதேபோன்ற ஒப்பந்தங்களில் பொதுவான அடையாளமொன்றிருந்தது. அதாவது அமெரிக்காவின் யுத்த தேவைகளுக்காக அந்த நாடுகளின் பூமியைப் பயன்படுத்த இடமளித்தல். எனவேதான், அமெரிக்காவின் இராணுவக் குழுவொன்று திருகோண மலைக்கு வந்திருப்பதில் சந்தேகம் எழுகிறது. அந்நிய நாடுகளின் யுத்த தேவைகளுக்காக எமது மண்ணை பயன்படுத்த இடமளிப்பதனால் எமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதேபோன்று எமது மண்ணையும், வளங்களையும் அந்நிய இராணுவமொன்றுக்கு பயன்படுத்த இடமளிப்பது, எமது நாட்டின் இறைமைக்கும் தன்னாதிக்கத்துக்கும் பாரதூரமான அச்சுறுத்தலாகும்.
எமது நட்பு நாடுகளின் மீது யுத்தரீதியான தாக்குதல் நடத்த எமது மண்ணில் இடமளிப்பதை அனுமதிக்க முடியாது. சமீபத்தில் திருகோணமலைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராணுவக் குழு, திருகோணமலைக்கு அண்மித்த தீவுகளில் ஏவுகணை பொருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அது குறித்து இந்த உயர் சபைக்கு தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆகவே, இது குறித்த அனைத்து தகவல்களையும் இந்தச் சபையில் முன்வைக்குமாறு கேட்கின்றேன்.