வாஷிங்டன் நகரில் நடந்த கோலாகல விழாவில், அமெரிக்காவின் அதிபராக, பராக் ஒபாமா நேற்று (20.01.2009) பதவி ஏற்றார். கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க அதிபராக பதவியேற்பது இதுவே முதல் முறை.
கடும் பொருளாதார நெருக்கடியையும், வேலை இழப்பையும் அமெரிக்கா சந்தித்துவரும் நிலையில், 44வது அதிபராக ஒபாமா பதவியேற்பது, அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கென்ய நாட்டைச் சேர்ந்த கருப்பின தந்தைக்கும், அமெரிக்காவின் கென்சாசை சேர்ந்த வெள்ளையின தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒபாமாவும் கருப்பர் இனத்தவராக கருதப்படுகிறார். அவர் ஹவாயிலும், இந்தோனேசியாவிலும் சில காலம் வளர்ந்தவர். சாதாரண பணியாளராக வாழ்க்கையை துவக்கி, அமெரிக்காவின் மிக உயரிய பதவியை அடைந்துள்ளார்.
ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் வக்கீலாக பட்டம் பெற்றவர். இதுவரை, இனப் பாகுபாடு காரணமாக அடிமைகளாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவும் தாங்கள் பாவிக்கப்படுவதாக கருதிவரும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மத்தியில், ஒபாமா அதிபராக பதவியேற்றது எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் முன் ஒபாமாவை, வெள்ளை மாளிகையின் வடக்கு போர்டிகோவில் வரவேற்றார், பதவி விலகிய அதிபர் புஷ். பின் அங்கிருந்து, பதவியேற்பு விழா நடக்கும் அரங்குக்கு இருவரும் சென்றனர். கடந்த 1861ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் பதவியேற்ற போது, அவர் பயன்படுத்திய பைபிள் புத்தகத்தில் கைவைத்தபடியே, அதிபர் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஒபாமா. பதவியேற்பு விழாவை ஒட்டி, காபிடல் அரங்கம் பகுதி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உளவுத்துறையை சேர்ந்தவர்கள், குறிபார்த்து சுடுவதில் பெரும் திறமை பெற்றவர்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அமெரிக்கா மட்டுமின்றி, வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களும் லட்சக்கணக்கில், அங்கு குழுமியிருந்து, ஒபாமாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். வாஷிங்டன் நகரம் மட்டுமின்றி, அமெரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இலங்கை நேரப்படி இரவு 10.00 மணிக்கு அமெரிக்க காபிடல் கட்டடத்தின் மேற்கு அரங்கில் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அமெரிக்க அரசின் கடற்படை பேண்டு குழுவினர், சான் பிரான்சிஸ்கோ , சான் பிரான்சிஸ்கோ கிரிஸ் இசைக்குழு அமைப்பினர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை பிரமாதப்படுத்தினர்.
கலிபோர்னியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் டயயானி பெயன்ஸ்டீன், கூட்டு பார்லிமென்ட் கமிட்டியின் தலைவர் என்ற வகையில் வரவேற்புரை ஆற்றி, விழாவை துவக்கி வைத்தார். துணை அதிபர் ஜோ பிடெனுக்கு சுப்ரீம் கோட் இணை நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின், ஜான் வில்லியம்சின் இசை நிகழ்ச்சி நடந்தது.
நாட்டின் முதல் பெண்மணியாகும் மிச்சேல், ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை எடுத்து வந்து, கையில் பிடித்திருக்க, அதன் மீது கைவைத்தபடி பதவி பிரமாணம் எடுத்தார் புதிய அதிபர் ஒபாமா. சரியாக 10.38 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 10.45 மணிக்கு உரை நிகழ்த்தினார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்றார். ஒபாமா பதவியேற்பு விழாவை ஒட்டி நகரின் மையப்பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, 47 வயதாகும் ஒபாமாவிடம் இருந்து, சிக்கலான நிலையை சந்தித்துவரும் அமெரிக்கர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்கட்சியினர், கடுமையான விஷயங்களில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.
ஒபாமாவின் பேச்சிலிருந்து …
நாம் அனைவரும் மிகப் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளோம். இதை அனைவரும் அறிவோம். அமெரிக்கா இத்துடன் முடியப் போகிறது, இதை தவிர்க்க முடியாது என்ற அச்சம் உள்ளது.
பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது. கடந்த காலத்தில் பொறுப்பற்றதனமாகவும், வீம்பாகவும் நடந்து கொண்டதால் ஏற்பட்ட நிலை இது. அதேசமயம், அடுத்த தலைமுறைக்கு நமது நாட்டை கொண்டு செல்லத் தவறியதும், மாற்று வாய்ப்புகள் குறித்து யோசிக்காததுமே இந்த நிலைக்கு இன்னொரு முக்கிய காரணம்.
பொருளாதார நெருக்கடியால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். வேலைகள் போயுள்ளன. வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நமது சுகாதார செலவுகள் அதிகரித்து விட்டன. பள்ளிகள் கூட சரிவர செயல்படாத அவல நிலை. எரிபொருள் நிலையும் கவலை அளிக்கிறது.
நமது நாடு போரில் ஈடுபட்டுள்ளது. வன்முறை, துவேஷம், தீவிரவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்போது நமக்கு என்ன தேவை என்றால், பொறுப்புணர்ச்சியுடன் கூடிய செயல்பாடுகள்தான். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு அங்கீகாரம் தேவை. அவரவர் கடமையை சிறப்பாக செய்ய வேண்டும். நமது நாட்டுக்கு, நமது உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமையை நாம் செய்வோம்.
பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு. பொருளாதாரத்தை சரி செய்ய உறுதியான, விரைவான நடவடிக்கை தேவைப்படுகிறது.
புதிய வேலைகளை உருவாக்குவதோடு, புதிய வளர்ச்சிக்கான அடிக்கல்லையும் நாம் நாட்டியாக வேண்டும்.
நிறைய சாலைகளையும், பாலங்களையும், மின் கட்டமைப்புகளையும் நாம் கட்டுவோம். நமது வர்த்தகத்தை தூக்கி நிறுத்துவோம். அறிவியலை மதிப்புமிக்க இடத்திற்கு உயர்த்துவோம். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி மருத்துவத்திற்கு ஆகும் செலவுகளைக் குறைப்போம்.
நமது வாகனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையான எரிபொருளை சூரியன், காற்று, மண்ணிலிருந்து எடுப்போம்.
நமது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை புதிய தலைமுறைக்கு ஏற்றபடி மாற்றுவோம். இவை அனைத்தையும் நம்மால் செய்ய முடியும். நாம் நிச்சயம் செய்வோம்.
கிறிஸ்தவர், முஸ்லிம்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடே அமெரிக்கா. இதில், எந்த மதமும் ஏற்றத்தாழ்வு உடையதல்ல.
நாம் பல்வேறு மொழி, கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனிதநேயத்துடனும், அமைதியுடனும் நமது வெற்றிகளை படைப்போம்.
அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் நண்பன். அந்த வகையிலேயே நாம் நடந்து கொள்வோம்.
நாம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் உண்மையானவை. மிகக் கடுமையானவை. பல சவால்கள் உள்ளன. ஆனால் அவற்றை எளிதில் சமாளிக்க முடியாது. குறுகிய காலத்தில் அவற்றை சமாளிப்பது இயலாத காரியம். ஆனால் அமெரிக்கா இவற்றை சந்திக்கும், சமாளிக்கும் என்றார் ஒபாமா.
பிபிசி உலக சேவையின் அனுசரணையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் கலந்துகொண்டவர்களில் 67 வீதமானவர்கள், பராக் ஒபாமா அவர்கள் அதிபராக தெரிவு செய்யப்பட்டமையால், அமெரிக்காவுக்கும், உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று கூறியிருக்கிறார்ர்கள். கடந்த கோடைகாலத்தில் நடத்தப்பட்ட இதுபோன்ற முன்னைய கருத்துக்கணிப்பு ஒன்றில், இந்த விடயத்தில் எந்தவிதமான நம்பிக்கையும் காண்பிக்காத ரஷ்யா, துருக்கி, எகிப்து மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் கூட தற்போதைய கருத்துக்கணிப்பில் அதிபர் பராக் ஒபாமாவின் தெரிவின் காரணமாக மிகுந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அவர் தொடர்பில் அதீத நம்பிக்கையுடனான கருத்து வெளியிட்டவர்கள் ஐரோப்பியர்கள்தான். உதாரணமாக, ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 80 வீதமானவர்கள் ஏனைய நாடுகளுடனான உறவுகள் மேம்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
ஒபாமா போன்ற ஒரு அதிபர், உலக பொருளாதார நெருக்கடிக்கே தனது நிகழ்ச்சித்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்றே பெரும்பான்மையினர் விரும்புவதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெளிவாகக் கூறுகிறது. ஆனால், அவர் எதிர்கொள்கின்ற சவால்களின் ஒரு சமிக்ஞையாக, உலகெங்கும் பெருந்தொகையானவர்கள், உலக காலநிலைமாற்றம், மத்திய கிழக்கு அமைதி மற்றும் இராக் விவகாரம் ஆகிய பிரச்சினைகளையும் அவர் முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
இதில் வித்தியாசமான விசயம் என்னவென்றால், ஒபாமா எந்த விடயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில், அமெரிக்க மக்களுக்கும், உலகின் ஏனைய நாடுகளின் மக்களுக்கும் இடையில் கருத்தில் வேறுபாடு இருக்கிறது.
உலக பொருளாதார நெருக்கடிக்கே ஒபாமா முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க மக்களும் ஒப்புக்கொள்வதாக இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகின்ற போதிலும், உலகின் ஏனைய மக்களைப் போலல்லாது, அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கே அடுத்த இடத்தை தருகிறார்கள். வெறுக்கப்பட்ட கடந்த 8 வருட புஷ்ஷின் ஆட்சியின் மூலமான பலனை ஒபாமா பூரணமாக அடைந்திருக்கிறார் என்று இந்த கருத்துக்கணிப்பை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், தற்போதுள்ள உற்சாகத்துடனான இந்த எதிர்ப்பார்ப்புக்களை அவர் தக்க வைத்துக்கொள்வது என்பது அவருக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும்.
இதேநேரம், பராக் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வைக் காணவென அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கே 20 பாகையை விட சற்று அதிகம் என்ற குளிரான காலநிலையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக் கணக்கான மக்கள் வாஷிங்டனில் நஷனல்மால் வீதியில் கூடி விட்டனர். இங்கு கூடிய மக்கள் கூட்டமானது தசாப்தங்களிலேயே மிகப் பெரிய கூட்டமென்று சில சமயங்களில் இதுவே எப்போதுமே மிக பெரிய மக்கள் திரள்வாக இருக்கக் கூடுமென்றும் அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஒபாமா வாழ்க்கை குறிப்பு:
முழுப் பெயர் – பாரக் ஹுசேன் ஒபாமா.
வயது – 47
பிறந்த நாள் – 1961, ஆகஸ்ட், 4.
பிறந்த இடம் – ஹோனலுலு, ஹவாய்.
படிப்பு – கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் சட்ட பள்ளி.
மனைவி – மிச்சல் ராபின்சன் ஒபாமா.
குழந்தைகள் – மலியா (10), சாஷா (7).
மதம் – ஐக்கிய கிறிஸ்தவ சர்ச்.
கட்சி – ஜனநாயகக் கட்சி.
குடும்பம் – கென்ய தந்தைக்கும், வெள்ளையர் இன அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை பாரக் ஒபாமா சீனியர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒபாமாவின் தாயான ஆன் துங்காமை மணந்தார்.
ஒபாமா பிறந்த 2 வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் ஒபாமாவின் தந்தை கென்யாவுக்குத் திரும்பி விட்டார். அங்கு தலை சிறந்த பொருளாதார நிபுணராக அவர் விளங்கினார். 1982ம் ஆண்டு கார் விபத்தில் அவர் மரணமடைந்தார்.
ஒபாமாவின் தாயார் ஆன், இந்தோனேசியாவைச் சேர்ந்த லோலோ சொயட்டரோ என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்குதான் ஒபாமா தனது 10 வயது வரை வாழ்ந்தார்.
பின்னர் ஹவாய் திரும்பிய அவர் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்தார்.
ஒபாமாவுக்கு அவரது தந்தையின் பிற திருமணங்கள் மூலம் 7 சகோதர, சகோதரிகள் கென்யாவில் உள்ளனர். அதேபோல அவரது தாயாரின் 2வது திருமணத்தின் மூலம், மாயா சொயோட்டரோ என்ற சகோதரி உள்ளார்.