“நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்கள் தீர்க்கமானதாக காணப்படும்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(29.10.2020) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,
ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் நேற்று காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும். ஒன்று கூடல்களை தவிர்த்து செயற்பட வேண்டும்.
குறிப்பாக உற்சவங்களில் பங்பேற்பது திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வது, சுற்றுலாக்கள் மேற்கொள்வது போன்ற விடயங்களை தவிரத்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். குறிப்பாக நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்கள் தீர்மானமிக்கதாக அமையவுள்ளது. எனவே ஊரடங்கு அமுலில் இல்லாத பகுதிகளில் உள்ள மக்கள் உட்பட அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.