“இராணுவ அச்சுறுத்தல்களுக்கோ, பயமுறுத்தலுக்கோ நாங்கள் ஒருபோதும் தலைகுனிய போவதில்லை . ஒரு தாய் இருக்கும்வரை இந்த போராட்டம் தொடரும்” என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க தலைவி கோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (30.10.2020) இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை தேடும் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
எங்களுக்கான நீதி எப்போது கிடைக்கும், அதனை யார் பெற்று தருவார்கள் என்ற ஏக்கத்தில் நாங்கள் வீதிகளில் காத்திருக்கின்றோம். எமது இந்த போராட்டம் தீர்வு கிடைக்கும்வரை தொடரும் என உலக நாடுகள் மாத்திரமல்ல சர்வதேசத்தில் வாழும் உறவுகளிற்கும் தெரியும்.
சர்வதேச நாடுகளில் வாழ்கின்றவர்கள் எங்களுக்காக குரல்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடும், எங்களுக்கான நீதியை சர்வதேசம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையோடும் நாங்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்.
சென்ற ஒரு சில நாட்களுக்கு முன் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டிருந்த போதும் இந்த கொடிய நோயின் காரணமாக அவரை சந்திக்க முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில் எமது நீதிக்கான கோரிக்கையை அவரிடம் கையளித்துள்ளோம். எமக்கான நீதியை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
கிளிநொச்சியில் மாத்திரமல்ல பல பகுதிகளிலும் இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கொடிய நோயின் காரணமாக எமது உறவுகள் போராட்டத்திற்கு வருகைதர முடியாது இருக்கின்றார்கள். இந்த நிலையில் வருகை தந்த சொற்ப உறவுகளை வைத்துக் கொண்டு எமது போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றோம். ஒரு தாய் இருக்கும்வரை இந்த போராட்டம் தொடரும்.
இந்த கொரோனா மாத்திரமல்ல இராணுவம், இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் கூட எங்களது உறவுகளை தேடுவதை கைவிடப்போவதில்லை. இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிறையவே அச்சுறுத்தல்கள், விசாரணைகள், விசாரிப்பது போன்றதான போர்வைக்கு மத்தியில் இந்த போராட்டத்தை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றோம்.
இந்த இராணுவ அச்சுறுத்தல்களுக்கோ, பயமுறுத்தலுக்கோ நாங்கள் ஒருபோதும் தலைகுனிய போவதில்லை. எமக்கு நீதி வேண்டும். கையளித்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே என்று இலங்கை அரசிடம் கேட்டு நின்ற போதிலும் 12 வருடங்கள் தாண்டியும் பதில் சொல்லவில்லை. அவர்கள் ஒருபோதும் எங்களுக்கு பதில் சொல்லப்போவதில்லை.
ஆகவேதான் நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்கின்றோம். ஐ.நா மன்றிலே 36ஆவது கூட்டத் தொடரிலிருந்து இன்று வரை நாங்கள் எமது உண்மை நிலையை எடுத்துக்கூறி சர்வதேசத்தின் ஊடாக நீதியை பெற ஆவலாக இருக்கின்றோம். எங்களது பூர்வீக நிலங்கள் மீட்கப்பட வேண்டும். அந்த இடங்களிலே நாங்கள் குடியேற வேண்டம். இன்று அகதிகளாக இடம்விட்டு இடம் மாறி நாங்கள் நாட்களை கழிக்கின்றோம்.
எங்களது பூர்வீக இடங்களிலே நாங்கள் வாழ வேண்டும். நாங்கள் பிறந்த மண்ணிலே நாங்கள் வாழவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.