அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ வருகை தந்த போது அவர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்திக்கவில்லை என்பது மிகப்பெரும் குறையாக முன்வைக்கப்பட்டிருந்ததுடன் அதற்கான காரணம் என்ன ..? என பலரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொம்பியோவை சந்திக்கவில்லை என்பதுடன் முன்னரேயே சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கவுமில்லை” என பிரதமர் அலுவலகத்தின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் அனுராதா ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் அனுராதா ஹேரத் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது-
“அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திக்காமை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
உண்மையில் ஆரம்பத்திலேயே பிரதமர் மைக் பொம்பியோவை சந்திப்பதற்குத் திட்டமிட்டிருக்கவில்லை.பொம்பியோவின் மிகக் குறுகிய கால விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் தலைமைகளில் ஒருவரை மாத்திரம் சந்திப்பது போதுமானதாகக் கருதப்பட்டது” எனவும் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.