“வரும் மார்ச் மாதம் நடைபெறப்போகும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால் தமிழர் பிரச்சனைகள் நீர்த்துப்போகும்” என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று (30.10.2020) யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில்;
2002.12.05 நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் கூட்ட அறிக்கையில் சமஷ்டியை பற்றி ஆராய்வதற்கு இணக்கம் காணப்படுகிறது. தற்காலிகமாக 13வது திருத்தத்தை காப்பாற்றிக்கொண்டு, அதை ஒரு தீர்வாக நோக்கி பயணிப்பதற்கு வேண்டுகோள் விடுப்பதன் ஊடாக சமஷ்டியை நோக்கி பயணிக்கவேண்டும்.
அந்தவகையில்தான் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அரசிற்கு கொடுத்த அழுத்தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டு 13வது திருத்தத்தை வைத்துக்கொண்டு சமஷ்டிக்கான தீர்வை நோக்கி பயணிக்கவேண்டும் . இது தான் அரசியல் தீர்வாக இருக்கமுடியும் . இலங்கைக்கான நோர்வே சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் தேசிய கட்சிகள் கேட்டுக்கொண்டால் சமஷ்டிக்கு ஆதரவாக தான் வேலை செய்வதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார். அந்த வகையில் தமிழ் தேசிய கட்சிகள் எரிக்சொல்ஹெய்மிடம் வேண்டுகோளை விடுக்கவேண்டும்
மார்ச் மாதம் நடைபெறப்போகும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால் எமது பிரச்சனைகள் நீர்த்துப்போகும். மீண்டும் இவர்களுக்கு காலநீட்டிப்பு கொடுத்தால் உலகத்திலே மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கும். ஆகவே அது பிரயோசனம் இல்லை. எந்த தீர்மானமும் எடுக்காவிட்டால் காலாவதியாகிவிடும். ஆகவே ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு அனுப்பப்படவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்க்கட்சிகள் அனைத்தும் முன்வைக்கவேண்டும்.
அதை இப்பொழுதே முன்வைப்பதனூடாக மார்ச் மாதம் அந்த விடயம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து நியூயோர்க் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு நகர்த்தவேண்டும் என்ற கோரிக்கையை நாம் அனைவரும் முன்வைக்கவேண்டும்” என தெரிவித்தார்.