இலங்கை மீது தொடர்ச்சியாக சீனா எடுக்கின்ற கரிசனை , அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின் வருகை என பல விடயங்களை சுட்டிக்காட்டி பல தரப்பினரும் அமெரிக்க – சீன பனிப்போரின் ஒரு பகுதியாக இலங்கை பயன்படுத்தப்படுவதாக பல தரப்பினரும் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் பொம்பியோவின் வருகையின் போது ஜே.வி.பி கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பேரணி ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் “அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் நிலவும் பிரச்சினையில் தலையீடு செய்வது இலங்கையின் வேலை அல்ல” என சீனாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பாலித்த கொஹொண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறிப்பிடும் போது ,
“இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் சிறந்தவொரு உறவு உள்ளது. அந்த உறவை வலுப்படுத்துவதே எனது நோக்கம். இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தெளிவான நோக்கம் உள்ளது. தற்போது அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் பிரச்சினை உள்ளது. அதனை அந்த இரு நாடுகளும் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதில் தலையிடுவது எமது நோக்கம் அல்ல. நாட்டின் நலன், சுயாதீன தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பது முக்கியமாகும். இலங்கை ஒரு பிரிப்படாத நாடு என்ற வகையில் உலக வல்லரசு நாடுகளின் பிரச்சினைகளில் தலையிடுவது எமது நோக்கம் அல்ல´ என அவர் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.