நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் தலை பள்ளிக்கு வெளியே பத்து நாட்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே போலீஸாரால் கொல்லப்பட்டார். அவர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது. மேலும், இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸுக்கும், பிரான்ஸ் நாட்டுக்கு எதிராகவும் ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிராகவும் இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிடும் போது “சுதந்திரமான பேச்சுகள் எந்தச் சமூகத்தினரையும் காயப்படுத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் கூறுகையில், ”நாங்கள் எப்போதும் சுதந்திரமான பேச்சுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்போம். ஆனால், சுதந்திரமான பேச்சுரிமையிலும் கட்டுப்பாடுகள் தேவை. நமது கருத்துகள் பிற சமூகத்தினரைக் காயப்படுத்தக் கூடாது. எல்லாவற்றுக்கும் வரம்பு உள்ளது” என்றார்.