மத மாற்றத் தடைச்சட்டத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை மத சுதந்திரத்துக்கான கிறிஸ்தவ அமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது. தனிமனித சுதந்திரத்தை மறுக்கும் இச்செயலுக்கு எதிராக மக்கள் சக்தியை அணிதிரட்ட அந்த அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இது தொடர்பில் திங்கட்கிழமை கொழும்பு அளுத்மாவத்தையிலுள்ள இயேசு ஜீவிக்கிறார் பணிமனையில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டதோடு விஷேட அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
மீண்டும் ஒரு முறை மதமாற்ற தடைச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற, சில புத்த பிக்குகள் நினைக்கிறார்கள். இதை நாம் வன்மையாக எதிர்க்கிறோம். இந்தச் சட்டம் கொண்டு வரப்படுமாயின், சுவிசேஷம் சொல்ல முடியாது, ஆன்மீகக் கூட்டங்களுக்குத் தடை, ஞானஸ்தானம் கொடுக்க முடியாது, வீட்டுக் கூட்டங்கள், வைத்தியசாலை ஜெபங்கள் செய்ய முடியாது, மதப் பிரசார சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற முறைகளை இந்தச் சட்டம் தடுப்பதால், நற்செய்தி அறிவிப்பது அழுத்தத்துக்குள்ளாகி இந்த நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களின் மத உரிமையும் சுதந்திரமும் பாதிக்கப்படுவதால் நாம் இதை வன்மையாக எதிர்க்கிறோம்.
இலங்கை அரசியல் யாப்பின் 3 ஆம் அத்தியாயம் 10,12 ஆம் ஷரத்துக்களின்படி ஒவ்வொரு மனிதனும் தனது சுய சிந்தனைக்கு சுதந்திரமானவனென்றும், சுய நினைவின்படி முடிவெடுக்கவும் ஒரு மதத்தின் கொள்கையை பின்பற்றவோ அல்லது ஒரு மதத்தை தழுவவும் அல்லது ஒரு நம்பிக்கையை தன் விருப்பப்படி பின்பற்றவும் சுதந்திரமானவன் என்றும் எந்த பிரஜையும் சாதி, சமயம், மொழி, பால், அரசியல் நோக்கம், பிறந்த இடம் இப்படிப்பட்ட நிலைமைகளில் ஒடுக்கப்படலாகாது என்றும் உள்ளது. ஆகவே ஒவ்வொரு மனிதனும் தனது சுயவிருப்பத்திற்கமைய எந்த சமயத்தையும் தெரிந்தெடுக்கவும் உரிமை உடையவன்.
2003 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கப்பட்டு பல எதிர்ப்புக்களால் கைவிடப்பட்டது. மீண்டும் 2004 ஆம் ஆண்டு இச்சட்டமானது ஹெல உறுமயவினால் கொண்டு வர முயற்சிக்கப்பட்டு பாராளுமன்ற குழப்ப நிலைமைகளால் கைவிடப்பட்டது. மீண்டும் 3 ஆம் முறையாக இச்சட்டத்தை கொண்டுவர முயற்சிப்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே இந்த சட்டத்தை இலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, சர்வதேச ரீதியில் உலகம் வாழ் கிறிஸ்தவர்களும் எதிர்க்கின்றனர். கிறிஸ்தவ நாடுகள் மற்ற சமயங்களிலுள்ளவர்களுக்கு இடையூறு விளைவித்து, சமய நம்பிக்கைகளில் தடைகள் ஏற்படுத்துவதில்லை. சகலருக்கும் மத சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்.
அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மத சுதந்திரத்தைப்பாதுகாப்பது அரசாங்கத்தின் கடப்பாடாகும். எனவே ஜனாதிபதியிடம் நாம் வலியுறுத்திக் கேட்பது மீண்டுமொருதடவை மதமாற்றத்தடைச்சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும் சகல இனமக்களும் ஒற்றுமையுடன் வாழும் நிலையை உறுதிப்படுத்துமாறும் கேட்கின்றோம். தேசிய கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் செயலாளர் வணபிதா ரொஷான் டி.எஸ்.ஏக்கநாயக்க கருத்துத் தெரிவிக்கையில் இந்த நாட்டில் சமீபகாலமாக கிறிஸ்தவ மக்கள் மிகவும் மோசமாக கணிக்கப்பட்டு வருவதாகவும் அடிமைகள் போல் நடத்தப்பட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்தார். ஒரு ஜனநாயக நாட்டில் மத சுதந்திரம் மறுக்கப்படுவதை எவராலும் அனுமதிக்க முடியாது. அதுவும் சட்டத்தின் மூலம் தடை செய்ய முயற்சிப்பதன் மூலம் ஜனநாயகம் வலுவிழக்கச் செய்யப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் மத மாற்றத் தடை முயற்சிக்கு எதிராகப் போராடத் தயாராக வேண்டுமென அழைப்பு விடுத்தார்.