“நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள முழுமையாக ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவே இருக்கிறோம்” என ஜே.பி.வி.யின் (மக்கள் விடுதலை முன்னணி) தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றில், இன்று (03.11.2020) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது,
“தற்போது கொரோனா, பொதுவான ஒரு எதிரியாக மாற்றமடைந்துள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்தும் காணப்பட்டால், நாடே பெரிதும் பாதிக்கப்படும்.
இன்று இராணுவத்தினர், சுகாதார அதிகாரிகள் என அனைவரும் ஒன்றிணைந்துதான் நிலைமையை கட்டுப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறார்கள். எனினும், இந்த கட்டமைப்பில் ஏதேனும் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டால், அது பாரதூரமாக அமைந்துவிடும். இதனை அரசாங்கம் புரிந்துக் கொள்ளவேண்டும்.
இது தேசிய ரீதியிலான பிரச்சினை. இதனை முறியடிக்க தேசிய ரீதியிலான பொறிமுறையொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும். இதற்கான ஒத்துழைப்பை வழங்கவும் நாம் தயாராகவே இருக்கிறோம். இந்த விடயத்தில் அரசியல் பேதங்களை கடந்து செயற்பட வேண்டும். அரசாங்கம் இதற்குத் தயார் என்றால், நாமும் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவே இருக்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.