முல்லைத்தீவு வான்பரப்பில் நேற்று முன்நாள் செவ்வாய்கிழமை இரவு 8:30 மணியளவில் அடையாளம் தெரியாத விமானமொன்று உட்பிரவேசித்து சென்றதனால் குழப்பங்கள் தோன்றியுள்ளன. பாக்கு நீரிணைக்கு மேலாக வந்த இந்த விமானம் மீண்டும் அதே பாதையினால் திரும்பி சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பான செய்திகள் இன்றைய இலங்கை சிங்கள, ஆங்கில நாளேடுகளில் பிரதான இடத்தைப் பெற்றுள்ளன.
இந்த மர்ம விமானம் மிகவும் உயரமாக பறந்ததாகவும், கடற்படையினர் விமானத்தை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை எனவும் வான்படை பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு வான்பரப்பில் பிரவேசித்த இவ்விமானம் பிரபாகரனை அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகங்கள் எழுந்தன. எனினும், விமானம் மீண்டும் திரும்பி செல்வதற்கு முன்னர் முல்லைத்தீவு பகுதியில் தரையிறங்கியதா என்பது தொடர்பில் எதுவும் தெரியாதபோதும், அதிக உயரத்தில் பறந்த விமானம் தரையிறங்குவது சாத்தியமற்றது என வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேநேரம், இந்த விமானம் இந்தியாவின் உளவுப் படைக்குச் சொந்தமான விமானமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. ஏற்கனவே கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட நேரத்தில்கூட இந்திய உளவு அமைப்பான றோ வின் விமானமொன்று வன்னிப் பகுதியை கண்காணித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விமானம் மிகவும் பிரகாசமான வெளிச்சங்களை கொண்டிருந்ததை கடற்படையினரும் வான்படையினரும் அவதானித்ததாகவும் அது திரும்பிச் செல்லும்போது வெளிச்சங்களின்றி சென்றதாகவும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.