தமிழ் மக்களின் பேரவலங்கள் தொடர்பில் பார்வையிடுவதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. சம்பந்தன்

sampthan.jpgவன்னியில் உள்ள தமிழ் மக்கள் அனுபவிக்கும் பேரவலங்களை நேரில் சென்று பார்ப்பதற்காக சுயாதீனக்குழுவொன்றை அங்கு அனுப்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனே இந்த வேண்டுகோளை விடுத்தார்.அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு :-

வன்னியில் தொடரும் யுத்தம் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பட்டினியுடன் மரநிழல்களின் கீழ் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.யுத்தம் ஒன்று இடம்பெறும்போது மக்கள் இடம்பெயர்வது மக்களின் விருப்பம். ஆனால், அவர்களைப் பலவந்தமாக வெளியேற்ற முடியாது. ஆனால், இப்போது நடப்பது என்ன? வன்னி மக்களின் வீடுகள் மீது குண்டுகள் போடப்படுகின்றன. அவர்களின் வீடுகள் அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்கின்றனர்.

தமிழ் மக்களை இந்த அரசு கால்களின் கீழ் போட்டு நசுக்குகின்றது. தமிழர்களை இந்த அரசு கண்ணியப்படுத்தவேயில்லை. இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் சமமானவர்கள். அவர்கள் சுதந்திரமாக சந்தோசமான வாழ்வை அனுபவிக்க இடம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு அப்படியானதொரு சுதந்திர வாழ்வை வழங்கவில்லை. அடக்குமுறைகள்தான் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. இந்த அரசு பெரியவர்களை மாத்திரமன்றி சிறிய குழந்தைகளைக்கூட கொன்றொழிக்கின்றது.  காயப்படும் மக்களுக்கு மருத்துவ வசதிகள்கூட வழங்கப்படுவதில்லை. இதைத்தான் தமிழர்களின் விடுதலை என்று அரசு சொல்கிறது.

தமிழர்களின் உரிமைகள் முற்றாக மறுக்கப்படுகின்றன. அவர்கள் மதிக்கப்படுவதேயில்லை. இதுவொரு பாரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை. இந்த நிலைமை மோசமாவதற்கு ஜே.வி.பியும் ஒரு காரணம். ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பு மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கை போன்றவற்றை ஜே.வி.பியினர் எதிர்த்தனர். அந்த எதிர்ப்புகள்தான் இந்த நிலைமைக்குக் காரணம். தற்போதைய யுத்தத்தின் உண்மை நிலையை அறியும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், அந்த உரிமையை அரசு தடுத்து வருகிறது. இதனால், உண்மைகள் வெளிவராமல் போகின்றன.

காசாவில் யுத்தம் நடைபெறும் பகுதிகளுக்குள் ஊடகவியலாளர்கள் சென்று வருகின்றனர். அங்கு ஊடகவியலாளர்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை. தாக்குதல்கள், இழப்புகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் வெளிவந்தன. இங்கு அந்த நிலைமை இல்லை. அங்கு செல்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் பத்திரிகைகள் மூலம் பேசப்பட்டாலும் வன்னிப் பகுதியை தனிமைப்படுத்திவிட்டு அரசாங்கத்தினால் முன் செல்ல முடியாது. இவ்விடயத்தில் சர்வதேசத்தை தலையிடுமாறு வேண்டுகின்றோம்.  வன்னியில் உள்ள மக்களின் நிலைமையை இப்போது எம்மால் தெளிவாக அறிய முடியாதுள்ளது. அங்கு அரசசார்பற்ற நிறுவனங்களும் இல்லை. இந்த நிலையில் சர்வதேச சமூகத்தின் சுயாதீன குழுவொன்று அங்கு செல்வது மிக அவசியம் – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    தலைவரே உங்கள் எண்ணங்கள் சரிதான் ஆனால் இருக்கும் இடமும் பின்னால் வரும் அழுத்தங்களும் நீங்கள் எது சொன்னாலும்
    கேலியாகி விடுகிறது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நீங்கள் என்னசொன்னாலும் அம்பலத்தில் ஏறப்போவதில்லை. நீங்கள் மட்டுமல்ல உங்களோடு சேர்ந்த இருபத்தியொன்றும் தான். இதற்கு ஒரு சினிமா பாடல்லுள்ளது. “செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தீர்களே கர்ணன்களே” வஞ்சகன் பயங்கரவாதமடா சம்பந்தன்…..

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    முதலில் இந்த கூத்தமைப்புக்காரர்கள் அவலத்திலிருக்கும் மக்களைச் சென்று பார்த்தார்களா?? வன்னிப்புலிகள் அழைத்தவுடன் காலில் விழ ஓடும் இவர்கள், என்று தமது மக்களைப் பற்றி கவலைப்பட்டிருக்கின்றார்கள். இதிலை 2 கூத்தமைப்புக்காரர் 3 மாத விடுப்பு எடுத்து ஐரோப்பாவில் நின்கின்றனர். நாட்டு நிலைமை மோசம் என்றால் அங்கேயே அகதியாக பதிந்து தம்மை காப்பாற்றும் நப்பாசையில். இந்த இலட்சணத்தில் தமிழ் மக்கள் பற்றி வெறும் முதலைக்கண்ணீர்.

    Reply