அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, செயலிழந்துள்ளதாக சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கியதேசியகட்சியின் முன்வைத்த நம்பிக்கையில்லாப்பிரேரணையை தாம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட வேளையில், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை என சபாநாயகர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற நீதிமுறைகளையும் பொதுநலவாய நாடுகளின் சட்டமுறைகளையும் கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.
எனினும் தேவையேற்படின் ஐக்கிய தேசியக்கட்சி, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணையை மீண்டும் முன்வைக்கலாம் என அவர் தெரிவித்தார். இதன் போது தமது இருக்கையில் இருந்து எழுந்த எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்றைய(21) தினத்திற்குள் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையை முன்வைக்க தமது கட்சி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.
இதன் படி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐ.தே.கட்சி நேற்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் டம்மிக்கே கித்துல்கொடவிடம் கையளித்தது. இந்தப் பிரேரணையில் எம்.பிக்கள் ஜோசப் மைக்கல் பெரேரா, அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, ஆர்.குணசேகர, ஜயலத் ஜயவர்த்தன ஆகியோர் கையெழுத்திட்டனர்.