கொரோனாத்தொற்றினால் இறந்து போகும் முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் முஸ்லீம்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் கூட எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாஸ, ரிசாட்பதியுதீன் போன்றோர் இது தொடர்பான கருத்துக்களை பதிவு செய்து முஸ்லீம்களின் உடல்கள் அவர்களின் மதமரபுகளின்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி,
“கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தடுப்பதற்கான, அத்தனை முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறோம். முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது, தவறு என்ற நிலைப்பாட்டில் ஆரம்பம் முதல் இருக்கிறேன்.
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தவிர்ப்பது பற்றி ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் உரையாடியுள்ளேன்.ஜனாஸாக்களை எரிப்பதை தடுக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. நாங்களும் மறுபக்கம் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
சுகாதாரத் தரப்பினரின் முழு சம்மதத்துடன், கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பதால், பாதிப்பில்லை என்ற பொது நிலைப்பாட்டுக்கு முதலில் வந்து, அதன் பின்னர் கொரோனா தகனம் செய்ய மாத்திரம் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான, சட்ட ரீதியான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெறுகிறது.
எதிரணி இதனை அரசியல் ரீதியில் கையாளமுயல்கிறது. சமூக வலைத்தளங்களில் எம்மீதும் குற்றஞ் சுமத்துகின்றனர். எம்மால் முடிந்த சகல முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறோம்” என்றார்