சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ ஆரம்பித்ததாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
5 கோடிக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 12 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன.
ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.
இதற்கிடையில், அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது.
இந்த தடுப்பூசியின் முதல் 2 கட்ட பரிசோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்தது. ஜூலை 27-ம் தேதி 3-ம் கட்ட பரிசோதனைகள் தொடங்கியது.
இந்த பரிசோதனையில் உலகின் பல நாடுகளை சேர்ந்தவகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மொத்தம் 43 ஆயிரத்து 538 பேர் தடுப்பூசி பரிசோதனைக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் நேற்றுவரை மொத்தம் 38 ஆயிரத்து 955 பேருக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை பாதுகாக்கிறது என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஃபிப்சர் நிறுவனத்தின் தலைவர் ஆல்பர் கூறுகையில், ‘மனித குலத்திற்கும் அறிவியலுக்கும் இன்று மிகச்சிறந்த நாள். 3-ம் கட்ட பரிசோதனையின் முதல் முடிவுகள் எங்கள் தடுப்பூசி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கிறது என்பற்கான முதல்கட்ட ஆதாரங்கள் உள்ளது என்பதை உறுதி செய்கிறது’ என்றார்.
ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கொரோனா பரவலை 90 சதவீதத்திற்கு அதிகமான அளவில் தடுக்கிறது. மேலும், இந்த தடுப்பூசியால் மிகப்பெரிய பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்த தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும் என உலக நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.