“அமெரிக்க நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி ஈழத் தமிழ் மக்களின் அவலங்களைப் போக்கும் வகையில் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்” – சுரேஷ் க.பிரேமச்சந்திரன் வேண்டுகோள் !

“அமெரிக்க நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி ஈழத் தமிழ் மக்களின் அவலங்களைப் போக்கும் வகையில் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்” என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கா தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சுரேஷ் க.பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுளார்.

அந்த அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவிற்கான 46ஆவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து முடிவடைந்துள்ளது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோஸப் ரொபினட் பைடன் ஜனாதிபதியாகவும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹரிஷ் துணை ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஈழத் தமிழ் மக்களின் இதயபூர்வ வாழ்த்துகள்.

ஆபிரிக்க கறுப்பின வழித்தோன்றலான ஒபாமாவை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்த அமெரிக்க மக்கள், தென்னாசியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை துணை ஜனாதிபதியாக்கி ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளனர்.

தேர்தலில் வென்ற அமெரிக்கத் தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பும் இலங்கையின் அரசியல் தலைவர்கள், இந்தப் புதுமைகளையும் பழகிக்கொள்ளவேண்டும். ஆனால் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று இலங்கையில் அரசியல் செய்வோர் மிக மோசமான இனவாதிகளாக உருவெடுப்பது வெட்கக்கேடானதும் வேதனைக்குரியதுமாகும்.

இலங்கை அரசாங்கத்தால் ஈழத் தமிழ் மக்கள் மேல் யுத்தம் திணிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வகைதொகையின்றி கொன்று குவிக்கப்பட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர். சர்வதேச சாட்சியங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, சாட்சியமற்ற யுத்தம் ஒன்று நடாத்தி முடிக்கப்பட்டது.

இதனால் மனித உரிமை மீறல்களும், யுத்தக்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் வகைதொகையின்றி அரங்கேற்றப்பட்டது. இவ்வாறு யுத்தத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பல தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா முன்னின்று உழைத்ததை நாங்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்.

ஆனால் இப்பொழுது, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு தன்னால் உடன்படவோ அல்லது அதற்குக் கட்டுப்படவோ முடியாதென கூறி இலங்கை அந்தத் தீர்மானங்களிலிருந்து வெளியேறியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளையும், உறவுகளையும் தேடி ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் சகோதரிகள் ஆயிரத்து ஐநூறு நாட்களைக் கடந்தும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

உலகமெல்லாம் மனித உரிமைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் குரல் கொடுக்கும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரும் அதன் தெரிவு செய்யப்பட்ட இன்றைய தலைவர்களான ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஷ் போன்றவர்கள் பாதிக்கப்பட்ட மற்றும் நீதி கோரிநிற்கும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமெனவும் அவர்களது இழப்புகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு சர்வதேச விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு, அவர்களுக்கான நீதி மற்றும் நிவாரணம் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

யுத்தக் குற்றங்களை மேற்கொண்ட இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மன்றங்களில் பாதுகாப்போம் என இலங்கைக்கு விஜயம் செய்த சீனத் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு உறுதிமொழி அளித்திருக்கின்றார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்தவிதமான நீதி விசாரணைகளும் நடாத்த உலக நாடுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

மனித உரிமைகள் குறித்து பேசினால் கூட சீன அரசாங்கம் தாங்கள் அரசுகளுடன் மாத்திரம்தான் உறவுகளைப் பேணுவதாகவும் மனித உரிமைகள் என்பது உள்நாட்டு விவகாரம் என்று தட்டிக்கழிக்கும் போக்கையே காணமுடிகின்றது. இந்த நிலையில், அமெரிக்க நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதியும் மற்றும் துணை ஜனாதிபதியும் ஈழத் தமிழ் மக்களின் அவலங்களைப் போக்கும் வகையில் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமென்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டிநிற்கின்றோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *