ஐ.பி.எல்2020 இன் இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களான மார்கஸ் ஸ்டோய்னிஸ் (0), தவன் (15), ரகானே (2) சொற்ப ஓட்டங்ககளில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் (65ஓட்டங்கள்), ரிஷ்ப் பண்ட் (56ஓட்டங்கள்) சிறப்பாக விளையாட டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 பந்துப்பரிமாற்றங்களில் 7 இலக்குகள் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் அடித்தது.
பின்னர் 157 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டி காக் 12 பந்தில 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4.1 பந்துப்பாரிமாற்றங்களில் 45 ஓட்டங்கள் விளாசியது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால் 36 பந்தில் அரைசதம் விளாசி மறுமுனையில் சிறப்பாக விளையாடினார் ரோகித் சர்மா.
அடுத்து வந்த இஷான் கிஷனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மும்பை அணி வெற்றியை நோக்கி சென்றது. 17.2ஆவது பந்துப்பரிமாற்றத்தில் அன்ரிச் நோர்ஜே வீசிய பந்தில் ரோகித் சர்மா 68 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணிக்கு 22 பந்தில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அடுத்து வந்த பொல்லார்ட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.
ஆனால் 18-வது பந்துப்பரிமாற்றத்தில் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். ஸ்கோர் சமமான நிலையில் ஹர்திக் பாண்ட்யா 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குருணால் பாண்ட்யா ஒரு ஓட்டம் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 18.4 பந்துப்பரிமாற்றத்தில் 5 இலக்குகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருது மும்பை அணியின் டிரெண்ட் போல்ட்டுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல் கோப்பையை ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இஷான் கிஷன் 19 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார்.
இந்த லீக் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவிக்கும் துடுப்பாட்ட வீரருக்கு செம்மஞ்சள் தொப்பியும், அதிக இலக்குகள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு ஊதா தொப்பியும் வழங்கப்படும்.
அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் கே.எல் ராகுல் 14 போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 670 ஓட்டங்கள் குவித்து செம்மஞ்சள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
17 போட்டிகளில் 30 இலக்குகள் வீழ்த்திய ரபாடா ஊதா தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
மேலும் விருது பெற்றவர்கள்:
வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) – தேவ்தத் படிக்கல் (ஆர்.சி.பி)
ஃபேர் பிளே விருது – ரோகித் சர்மா (மும்பை)
கேம் சேஞ்சர் விருது – கேஎல் ராகுல் (பஞ்சாப்)
சூப்பர் ஸ்டிரைக்கர் விருது – பொல்லார்டு (மும்பை)
அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது – இஷான் கிஷண் – (மும்பை- 30 சிக்சர்)
பவர் பிளேயர் விருது – டிரெண்ட் போல்ட் (மும்பை)
மதிப்பு மிகுந்த வீரர் – ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்)