”இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.” : பா. நடேசன்

nadesan.jpgஈழத்தின் தற்போதைய கள நிலவரம் தான் என்ன? அதை அறிந்து கொள்ள சில தொடர்பாளர்களை நாம் அணுகினோம். “நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. இராணுவக் குண்டுவீச்சு அப்பாவி பொதுமக்களைத்தான் அதிகம் காவு கொள்கிறது. புலிகள் தரப்பில் இன்னும் பெரிய யுத்தம் தொடங்கப்படவில்லை. தற்கொலைப்படையான கரும்புலிகள் இன்னும் களமிறங்கவே இல்லை.
புலிகளின் முன்னணி தளபதிகளும் இன்னும் களமாட வரவில்லை. புலிகளின் முழுவேகத் தாக்குதல் தொடங்கும்போதுதான் என்ன நடக்கும் என்பது தெரியும். அதை இப்போதே கணிப்பது கடினமானது. இந்தக் கவலை இராணுவத்திற்கும் இருக்கிறது” என்றனர் அவர்கள்.

முல்லைத்தீவு தற்போது ஐம்பத்து ஏழாயிரம் இராணுவ வீரர்களின் முழு முற்றுகையில் இருக்கிறது. புலிகள் இப்போது முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டு விட்டனர். புலிகளின் கதை விரைவில் முடியப் போகிறது” என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

நிலைமை இப்படியிருக்க `யானை குழியில் விழப்போனால் தவளை கூட உதை கொடுக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப, ஈழத்தில் ஒரு சிக்கலான போர்ச் சூழல் நிலவும் நிலையில், இங்கோ கருணாவை வைத்து நீண்ட பொய்ப்பிரசாரம் ஒன்றைக் கட்டவிழ்க்கும் முயற்சி நடக்கிறது” என்று குற்றம் சாட்டுகிறார்கள் தமிழின ஆர்வலர்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பா.நடேசன் அவர்களை நாம் பேட்டி கண்டோம்.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர மேனன், இலங்கை அதிபர் ராஜபக்ஷ சந்திப்பால் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா? அல்லது என்ன வகையான மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறீர்கள்?

“கடந்த முப்பதாண்டு காலமாக எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தின்போது இந்திய இராஜதந்திரிகள் பலமுறை கொழும்புக்கு வந்து சென்றுள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் பிரச்னைகள், அவர்கள் எதிர்கொள்ளும் அழிவுகள் அதிகரித்துச் செல்கின்றனவேயொழிய குறைந்த பாடில்லை. இம்முறை சிவ்சங்கர் மேனன் வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு எமது மக்கள் மீது கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பலநூறு தமிழர்கள் காயமடைந்து வரும் நிலையில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு அகதிகளாக காட்டிலும், மேட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலத்தின் சின்னமாக தமிழீழ தேசம் காட்சியளிக்கிறது. சிவசங்கர மேனனின் வருகையின் போதோ அல்லது பின்னரோ எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இது எமக்கும் எம் மக்களுக்கும் மிகுந்த வேதனையளிக்கிறது.”

புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மான் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாக ஒரு செய்தி பரவியதே. இது உண்மையா, வதந்தியா? புலிகள் மற்றும் உலகத் தமிழர்களின் மனதிடத்தைச் சீர்குலைக்க அப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டதா? அதன் பின்னணி என்ன?

“அது ஒரு பொய்யான வதந்திதான். எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகள் போராட்டத்தைக் களங்கப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் இதுபோன்ற பரப்புரைகளை மேற்கொள்வது வழமை. எமது மக்களுக்கும் இது பழகிப்போன ஒன்று. இதனால் உலகத் தமிழினத்தின் மனதிடம் ஒருபோதும் குலையாது. மாறாக முழுத் தமிழினமும் எமக்காக ஒருமித்து ஓங்கிக் குரலெழுப்புகிறது”.

கருணா அவரது பேட்டியொன்றில், `இலங்கைத் தமிழர்களின் இந்த அழிவுக்குக் காரணமே பிரபாகரன்தான்’. நான் ஒருவன் மட்டும்தான் அவரிடம் பேச முடியும். தனிமனிதக் கொலைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் அதைக் கேட்காமல் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார்’ என்றெல்லாம் கூறியிருக்கிறாரே?

“கருணா சொல்வது அப்பட்டமான பொய். தலைவர் எம் எல்லோரையும் அடிக்கடி சந்தித்துக் கதைப்பவர். மற்றவர்களின் கருத்துகளுக்கு செவி மடுப்பவர். கருணா இயக்கத்தில் இருந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு பகுதியில் மக்கள்மீது வெறுக்கத்தக்க வன்முறை சார்ந்த செயல்களைச் செய்ததால் பலமுறை தலைவரால் கண்டிக்கப்பட்டவர் கருணா. அவரது கூற்று கேலிக்கிடமானது. தமிழ்மக்கள் ஒருபோதும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்”.

நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் கேட்காமல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, நூறுகோடி ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடினார். புலிகள் இயக்கத்தில் உள்ள தளபதி பானு அந்தத் தாக்குதலை நடத்தினார். அதுபோல இந்திய அமைதிப் படை வெளியேறிய பின் இங்கிருந்த டி.என்.ஏ. எனப்படும் தமிழ்தேசிய இராணுவத்தைச் சேர்ந்த 1200 தமிழ் இளைஞர்களை பிரபாகரனின் உத்தரவின்பேரில் பதினெட்டு நாளில் நாங்கள் கொன்றோம். பல தமிழ்த் தலைவர்களின் கொலைகளுக்கு முழுக்காரணமும் பிரபாகரன்தான்’ என்று கருணா கூறியிருக்கிறாரே?

“யாழ்ப்பாண முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் இரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது பாரிய நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டார். இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்.

தமிழ் தேசிய இராணுவத்தில் இருந்த இளைஞர்களையும், கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு எதிராகவும் கருணா எடுத்த நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள மக்களிடம் கேட்டால் தெரியும். கருணா அரசியல் ஞானமற்ற, பழமைக் கருத்துக்களில் ஊறிய எதையும் இராணுவவாதக் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய நபர். தற்போது அவர் அரசபடைகளின் ஒட்டுக்குழுவாகச் செயல்படுவதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவரது சமூக விரோதச் செயல்களுக்காக எமது தலைமைப் பீடம் நடவடிக்கை எடுக்க முயன்றபோதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்தார். எந்தவித அரசியல் தெளிவோ, கொள்கைப் பற்றோ இல்லாத, தனது சுகபோகங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு நபராகவே அவரை நாம் பார்க்கிறோம்.”

`பிரபாகரன் எந்தப் போர்க்களத்திற்கும் வந்ததே இல்லை. பிரபாகரன் ஒரு டம்மி ஆள் போலத்தான்’ என்கிறாரே கருணா? அப்படியா?

“இது அவரது கனவுலக கற்பனைவாத கட்டுக் கதையாகும். எமது தலைவரின் போர்த்திறமையை அரசப்படைகளிள் தளபதிகளே வாயாறப் புகழ்ந்திருக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் தளபதிகளும் பாராட்டியிருக்கிறார்கள். கருணாவின் கூற்று சித்த சுவாதீனமற்றர்களின் பேச்சைப் போன்றதாகும்.”

`புலிகளின் ஆள்பலமே கிழக்குப் பகுதிதான். அதை நான் கலைத்து விட்டேன். நான் வெளியேறிய பிறகு புலிகளுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை’ என்று கருணா கூறியிருப்பது உண்மையா?

“தமிழ் மக்கள் முழுவதும் எம்முடன்தான் இருக்கிறார்கள். கருணா வெளியேறிய பிறகும் நாம் பல வெற்றிகளை அடைந்திருக்கிறோம். அவரது கூற்றைப் பெரிதுபடுத்த வேண்டாம்.”

`தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் புலிகளுக்காக ஆயுதம் கடத்தி பணம் பெறுபவர்கள்’ என்று கருணா கூறியிருப்பது பற்றி…..?

“ஏலவே நான் கூறியது போல கருணா அரசியல் விவேகமோ, ஞானமோ அற்றவர். எமது விடுதலைக்காக அன்று தொட்டு இன்றுவரை குரல் கொடுத்து வரும் எம் தொப்புள்கொடி உறவுகளான தமிழகத் தலைவர்கள் பற்றி இப்படிக் கருத்துக் கூறியிருப்பதில் இருந்தே கருணா எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

`இலங்கையில் தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற போர்நிறுத்தம் அவசியம். மக்கள் நலனை பிரபாகரன் கருத்தில் கொள்பவர் என்றால் அவர் சரணடைய வேண்டும்’ என்றும் கருணா கூறியிருக்கிறாரே?

“தமிழக மக்களைக் கொன்றழித்து வரும் இராணுவத்தின் கருத்தும், கருணாவின் கருத்தும் இந்த விஷயத்தில் ஒரேமாதிரியாக இருக்கிறது. எமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் எம் தலைவரைச் சரணடையுமாறு கோருவது கனவில்கூட நடக்கப் போவதில்லை. அரசின் கைக்கூலியான கருணாவின் இந்தக் கூற்றுபற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.”

கருணாவிற்கு கிழக்கு இலங்கையில் ஆதரவு இருக்கிறதா? அங்குள்ள தமிழர்கள் அவரை வரவேற்கிறார்களா?

“மக்களால் முற்றுமுழுதாக வெறுத்து ஒதுக்கப்பட்டவர் கருணா. முன்பே நான் கூறியது போல மக்கள் விரோதச் செயல்களுக்காக எமது இயக்கம் கருணா மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்துள்ளார்.”

முல்லைத்தீவில் நிலைமை இப்போது எப்படியிருக்கிறது? இராணுவ சுற்றிவளைப்புக்குள் புலிகள் சிக்கிவிட்டார்கள். போராளிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது’ என்கிறதே இராணுவத் தரப்பு. இதிலிருந்து எப்படி மீண்டெழப் போகிறீர்கள்?

“நாம் எவ்வித முற்றுகைக்குள் இருந்தாலும் எமது மக்களின் சுதந்திரமான சுபிட்சமான வாழ்விற்காக உலகத் தமிழினத்தின் ஆதரவோடு இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.”

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஒருசில கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள், அமைப்புகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. தமிழக மக்களின் இந்த ஆதரவை அங்குள்ள தமிழர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

“தமிழக மக்களை இங்குள்ள மக்கள் தமது உடன்பிறப்புகளாகவே, தொப்புள்கொடி உறவுகளாகவே பார்க்கிறார்கள். தாயகத் தமிழகத்தையும், தமிழீழத்தையும் ஒரு சிறிய கடல் நீரேரியே பிரித்து நிற்கிறது. இது வரலாற்று ரீதியாக யாராலும் மறுக்க முடியாத உண்மை.”

இந்தியாவில் மைய அரசியலில் பெரிய கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா `புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்’ என்றும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு என்றும் பேசி வருகிறதே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“எமது விடுதலைப் போராட்டம் நீதியானது, நியாயமானது, தர்மத்தின்பாற்பட்டது என்ற உண்மையை அவர்கள் புரிந்துள்ளார்கள் என்பதாகவே பார்க்கிறேன்”.

மீண்டும் முதல் கேள்விக்குத் தொடர்பான இன்னொரு கேள்விக்கு வருகிறேன். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகை தவிர்க்கப்பட்டு அந்தத் துறையின் செயலாளர் இலங்கை வந்ததை ஏமாற்றமாக எடுத்துக் கொள்ளலாமா? அங்குள்ள தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?

“இங்குள்ள தமிழர்கள் இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு யார் வந்தாலும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் எவ்வளவு திறமை வாய்ந்த இராஜ தந்திரிகள் இங்கு வந்தாலும் அவர்களை சிங்கள இராஜ தந்திரிகள் ஏமாற்றி விடுவார்கள் என்ற கருத்துப்படவே பார்க்கிறார்கள்.”
 
நன்றி: குமுதம்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

  • Consatantine
    Consatantine

    I am sure everyone will appreciate Mr. Nadasen’s sense of humor (Re: forcing out Muslims from North)

    Constantine

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அன்ரன் பாலசிங்கமே யாழ்ப்பாண முஸ்லிம்களை வெளியேற்றியது தவறுதான் என்று ஒப்புக்கொண்ட பின்பும் கூட நடேசன் மக்களை ஏமாற்ற எப்படி எல்லாம் கதை விடுகின்றார். இவங்கள் திருந்தவே மாட்டார்கள். இந்த நிலையிலும் எப்படியெல்லாம் பீலா காட்டுகின்றார்கள். இவ்வளவு காலமும் மக்களை ஏமாற்றியது போதாதென்று இன்னமும் மக்களை முட்டாள்களாக்கலாமென்றே சிந்திக்கின்றார்கள்

    Reply
  • BC
    BC

    யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றி நடேசன் பேட்டியில் சொன்னது அவர் எவ்வளவு தூரம் பொய் சொல்வார் என்பதற்கு எடுத்துகாட்டு.

    Reply
  • mohamed
    mohamed

    முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டுமின்றி மன்னார் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற அனைத்துப் பகுதிகளில் இருந்தும் புலிகளால் 1990 ம் ஆண்டு துரத்தப்பட்டனர் என்பது வரலாற்றுத் தவறு. இதை 1993 ம் ஆண்டளவில் பிபிசிக்கு பிரபாகரன் வழங்கிய பேட்டியில் ஏற்றுக் கொண்டார். அன்டன் பாலசிங்கமும் ஏற்றுக்கொண்டார். மறைந்த தமிழ் கூட்டமைப்பு எம்பி ரவிராஜ் கூட முஸ்லிம்களிடத்து இச் செயலுக்காக மன்னிப்புக் கோரினார். அதைவிட இனையத்தில் எழுதும் அன்பர்கள் நியாயவாதிகள் இச் செயலை எப்போதும் வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர். இது இவ்வாறு இருக்க அம்புலிமாமா கதைபோல் கற்பனையாக ஏதோபிதற்றுகிறார். இப்படிப்பட்ட அரசியல் அரைவேட்காட்டினர் இயக்கத்தில் இருந்ததால்தான் முல்லைத்தீவு மட்டும் ராணுவம் வந்து விட்டது. இவர் வரலாற்றை மற(றை)க்க முல்லைத்தீவில் உள்ளாரா இல்லை நாட்டை விட்டு ஓடி விட்டாரா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலியளிடம் உண்மை எது? பொய் எது?
    பிரிச்சு பார்க்கிறதிற்கு என்ன இருக்கிறது ? இனி கட்டுநாயக்காவை நோக்கி போகிறார்களா? கடலை நோக்கி ஓடுகிறார்களா? என்பதை பற்றி சிந்திக்கவேண்டும்.

    Reply
  • thambu
    thambu

    மனிதத்திற்கெதிராய் பொய் பேசுவதுதான் புலிகளின் ஊடகதர்மமாய் இருக்கலாம். ஆனால் புலிகள் சொல்வதை உலகமே நம்பிடும் என்ற கற்பனை வேண்டாம் நடேசன்.

    Reply
  • palli
    palli

    உங்களுக்கு இருக்கு ஆனால் எமக்கு (மக்களுக்கு) இல்லை. முஸ்லீம் மக்களை யாழ்நகரை விட்டு வெளியேற்ற தலமை தாங்கியவர் இளம்புழுதி. ஆனால் இன்று வழுதிக்கும் நடேசர்க்கும் பதவிகாரணமாக சில முரன்பாடு. ஆகவே நடேசன் சரியான நேரத்தில் வழுதியை கவுக்கிறார். அழியபோற நேரத்தில் கூட அழிக்கும் தனம்(விஸம்) மாறவில்லை. தற்ப்போது வழுதி முல்லைதீவு அரசியல்லுக்கு பொறுப்பாம்.
    பல்லி.

    Reply
  • santhanam
    santhanam

    எவ்வளவு திறமை வாய்ந்த இராஜ தந்திரிகள் இங்கு வந்தாலும் தமிழ் மக்கள் முழுவதும் எம்முடன்தான் இருக்கிறார்கள் எமது விடுதலைப் போராட்டம் நீதியானது நியாயமானது தர்மத்தின்பாற்பட்டது அரசியல் பிரிவுத் தலைவரான பா.நடேசன் அவர்கள் இப்படிசொன்னார் ஆனால் அவருக்கு சிங்களமனைவி

    Reply
  • Saraniyan
    Saraniyan

    ராமதாஸ் போன்ற இந்துவெறிப் பின்னணிகளின் ஏவலால் எந்த முன்னறிவிப்புமின்றி 24 மணிநேரத்தில் ஆடிமுடித்த வரலாற்று வெட்கம்! இதை அரங்கேற்றியது புலிகள் / நூறுகோடிக்கு மேலான சொத்துத் திருடிய பயன் மட்டுமே எரிந்த வீட்டில் திருட முடிந்தது. இவை புதுக்கதை விடவே இயலாத அப்பட்டமான உண்மைகள்

    அதெருபக்கமிருக்க// அந்த மக்களை மீளவும் அவர்களது இடங்களில் குடியேறுமாறு கேட்கிறோம். எங்கள் கட்டுப்பாட்டில் யாழ்பாணம் வந்தபின் குடியமர்த்தப் போகிறாராம்// நடேசச் கடவுள்

    சிரிக்கவா? அழவா எதுவுமே தோன்றாத நிலை!
    நடேசன் காலத்துப் பொலிசுக்கு எட்டாங் கிளாசும் தேவையில்லை! அதிலும் கொடுமை அந்தக் காலத்து பொலிசுக்கு நேர்முகப் பரிட்சையில கூடுதல் பிழைவிட்டால் தான் தெரிவு செய்வினமாம். ஏனெண்டால் மேலதிகாரி ஓடர் போட்டால் கேட்டுக் கேள்வி இல்லாமல் சுடுவாங்ளெண்டு. தலைவரின்ர இன்ரர்வியிலையும் நடேஸ் பாஸ் எண்டு சொன்னால் டபிள் ஓகே!

    உறவுமுறை/ உணவுமுறை / பாடசாலைகள் எனக் கலந்து காலம் காலமாக வாழ்ந்த அந்த மக்கள் /ஒரு பகுதியில் வணக்கத் தேவையைக் கருத்திற்கொண்டு மட்டும் அப்பகுதியில் தம்மை செறிவாக்கிக் கொண்டிருந்தனர். யாழ் மாவட்டத்திலேயே செறிவான பெறுமதியான கல்வீடுகள் காணப்பட்ட ஒரு பகுதியது. பொம்மை வெளி தவிர ஆசாத் றோட்டிலிருந்து சிவன் பண்ணை வரை அத்தனை வீடுகளும் அந்த மக்களின் அயராத உழைப்பும் சிறுவர்த்தகங்களும் தேடித் தந்த சொந்த வீடுகளும் நிலங்களும்!

    தலைவருக்குத் தெரியாத வெளியேற்றம் என்று வைத்தால் தெரிந்தவுடன் நேர்மையான தலைவர் செய்யவேண்டியதென்ன அவர்கள் வரும் வரை அவர்களது சொத்துடமைகள்/ வீடுகள்/ காணிகள் பாதுகாக்கப்பட்டிருக்கு வேண்டும்.

    வெளியேற்றம் நிகழ்தபோதும் அதன் பின்னரும் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந் போது திருப்பி அழைத்திருக்க வேண்டும்.

    இவர்களைத் திரும்ப அழைப்பதில்லை என்ற முடிவைப் புலிகள் வலுவான தீர்மானமாக்கிக் கொண்டார்கள்!

    இதனால் அவர்கள் வாழ்ந்த தடயங்களே இல்லாமல் அவர்களது பகுதி தமிழர்களுக்குப் புலிகளின் சிபார்சில் பங்கிடப்பட்டுவிட்டது. இது தான் விரட்டியதைவிட கொடுமையானதும் கீழ்தரமானதுமான நிகழ்ச்சி?

    இனி அவர்கள் திரும்ப வந்து எங்கு வாழ்வது? பள்ளிவாசலைச் சூழ்ந்த குடியமைப்பு/ நகரத்தை சார்ந்த தொழில்கள் இவைகள் கிடைக்கும் வகையில் அவர்கள் வாழ்ந்தது போல் பொருத்தப்பாடான எந்த இடமும் யாழ்பாணத்தில் இல்லை.

    தாம் வாழ்ந்த வீடுகள்/ காணிகள் மீளத்தரவேண்டும் என்ற நியாயமான கோரிக்கை கூட இரண்டு இனங்களின் பகைமுரண்களை அதிகரித்து இனக்கலவரத்தையோ பாரிய வெறுப்புக்களையோ தோற்றுவித்து மீண்டும் இறப்புகள் போன்ற மனித அவலத்தைக் கூட ஏற்படுத்தலாம்.

    மூன்று சதுர மைல் பரப்புக்குள் முடங்கிச் செத்துவிட்ட புலிகள் உயிர்த்து எழுந்து வன்னி/ யாழ் மீட்பதாகப் பேட்டி கொடுக்கலாம் அதை ஆனந்தவிகடன் போல குட்டிப் பூர்சுவா வர்தக ஏடுகள் எழுதலாம். ஆகப் போவது ஒன்றுமேயில்லை

    அரச படைகளின் உதவியுடன் இஸ்லாம் மக்கள் வாழ்ந்த பகுதி முழுமையாக விடுவிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு மீளக் கையளிப்தாக இருந்தால் மட்டுமே அவர்கள் திரும்புவார்கள்.

    இதற்கு ஒத்துழைப்பதால் மட்டுமே யாழ்ப்பாணத் தமிழர் தம் வரலாற்று கறையைக் கழுவிக்கொள்ளலாம் என்பதே வாஸ்தவம்!!!!

    Reply
  • vaseeth
    vaseeth

    காகிதப் புலிகளின் புதிய ஒப்பாரி.
    ஆமை சுடுவது மல்லாத்தி. அதை நாம சொன்னாப் பொல்லாப்பு. என்று எங்கட உம்மம்மா ஓரு கதை சொல்லுவா. அப்படி இருக்கிறது சாணக்கியர்களின் ஓலம்.

    ஆம். 3500 மைல்களுக்கு அப்பால் இருக்கும் காஸாவுக்காக கூக்குரல் இடுகின்றீர்களே! 100மைல்களுக்கப்பால் இருக்கும், எங்களுக்காகவும் கொஞ்சம் அழுவுங்களேன்!? என்கின்றனர் எமது ஜாம்பவான்கள்.

    என்னத்தை சொல்வது.
    எப்படி சொல்வது.
    எங்கிருந்து ஆரம்பிப்பது.
    எப்படி ஆரம்பிப்பது.
    அழுதழுது எழுதுவதா ?
    வெம்பி வெடித்து எழுதுவதா ?

    1991இல் மன்னார் முருங்கன் பள்ளிவாசலில் இறந்த முஸ்லீம்களின்; உறவினர்களும், எரிக்கப்பட்ட கடைகளின் சொந்தக்காறர்களும் இன்னும் அக்குறணை, மாத்தளை, மடவளையில் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதைச் சொல்வதா? அல்லது அப்போது சிறிலங்காவின் முதலாவது முஸ்லீம் உதவி அரசாங்க அதிபராக இருந்த “மகுறுப்”; உங்களால் சுட்டுக் கொல்லப்பட்டும் இதுவரை விட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கும் அக்குடும்பத்தின் அவலத்தைச் சொல்வதா?

    காத்தான்குடி பள்ளிவாசலுக்குள் நுழைந்து தொழுது கொண்டிருந்தவர்களைச் சுட்டுக்கொன்று சப்பாத்துக்கால்களால் குரான்களை எட்டி உதைத்து எள்ளி நகையாடியதைச் சொல்வதா? அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலுக்குள் நுழைந்து அப்பாவி முஸ்லீம்களைக் கொன்று வீதியில் சென்று கொண்டிருந்த 16 முஸ்லீம்களை கைகளை கட்டி சுட்டும், பசியடங்காமல் வெட்டியும் கொன்றஅந்த சூரசம்ஹாரத்தைச் சொல்வதா ??

    பொத்துவில் பாணமை முதல் மூதுர், கிண்ணியா, தோப்புர் வரை உள்ள முஸ்லீம்களை அவர்களது வயல் நிலங்களைவிட்டு விரட்டியடித்து அவர்களை சோத்துக்கு வழியில்லாதவர்களாக்கி வெறும் வயிற்றுக்காறர்களாக்கிய அந்த சோகத்தைச் சொல்வதா?

    கடந்த 15 வருடங்களாக உங்களிடம் வயல்நிலங்களை இழந்த அந்த ஏழை முஸ்லீம் விவசாயிகள் வயிற்றுப்பசியைப் போக்குவதற்காக வளைகுடா நாடுகளில் “அரபிக்களின் கக்கூசுகளைக்” கழுவிக்கொண்டிருக்கும் அகோரத்தைச் சொல்வதா?

    யாழ் மாவட்டத்தில் இருந்த 91ஆயிரம் முஸ்லீம் குடும்பங்களை உடுத்த துணியுடன் வெளியேற்றி அந்த அப்பாவி மக்களை புத்தளம் முதல் கொழும்பு, வேருவளை வரை பிச்சை எடுக்க வைத்து சிறிலங்கா வாழ் மொத்த சோனியையும் பைத்தியக்காறர்களாக்கிய அந்த தான்தோன்றித்தனத்தைச் சொல்வதா?

    எதைச் சொல்வது! எதை விடுவது!!

    “அயல்வீட்டாரையும் உன்குடும்பத்தார் போல் நேசி” என்று சொல்கின்ற மதம் இஸ்லாம். அடுத்த வீட்டுக்காறன் பசித்திருக்கும் போது நீ உன்னிடம் உள்ள உணவில் ஒரு பகுதியை அடுத்த வீட்டுக்காறனுக்கு கொடு என அறுதியிட்டு சொன்ன மதம் இஸ்லாம்.
    நீ எந்த அரசின் கீழ் வாழ்கின்றாயோ, அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நட என உறுதிபட சொன்ன மதம் இஸ்லாம். அதற்காக கொத்தடிமையாக வாழச்சொல்லவில்லை. உனது தொழில், உனது மார்க்கக் கடமையைச் செய்ய ஒரு இடம் (பள்ளிவாசல்) இருந்தால் போதும் என்று உறுதிபடவும் சொன்ன மதம் இஸ்லாம்.

    அந்த புண்ணிய மதத்தை தழுவிய முஸ்லீம்கள்தான் சிறிலங்காவில் வாழ்கின்றனர். நாம் சிறிலங்காவில் எந்தப்பகுதியில் வாழ்கின்றோமோ அந்தப் பகுதி மக்களுடன் கைகோர்த்து சகஜமாகத்தான் வாழ்கின்றோம். வாழ்ந்தோம்.

    காலியில் உள்ள முஸ்லீம்கள் சிங்கள “பெரஹர” காலத்தில் எப்படி சிங்கள மக்களுடன் சேர்ந்து பெரஹர கொண்டாடினார்களோ அதே போல்தான் வடகிழக்கில் உள்ள முஸ்லீம்கள் பொங்கல், தீபாவழி, சித்திரை காலங்களில் தமிழ் மக்களுடன் சேர்ந்து மோதகம், அவல், சக்கரைப்பொங்கல் என உண்டு, உறங்கி வாழ்ந்தோம். இப்போதும் வாழ்கின்றோம்.

    அதுமட்டுமா? தமிழ் இளைஞர் பேரவை காலத்திலிருந்தே வடகிழக்கில் உள்ள முஸ்லீம்கள் இலைமறை காய்களாக இளைஞர்களும், வியாபாரிகளும் சகல விடுதலை அமைப்புக்களுக்கும் உதவி செய்தார்கள்,

    அப்போது நீங்கள் ஆயுதங்கள் வாங்க அல்லாடிய போதும், இந்தியாவுக்கு உங்களை பைபர்கிளாஸ் போட்டுகளில் ஏற்றி இறக்கவும், உங்கள் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தவும், உங்கள் உறுப்பினர்கள் பிடிபட்டால் பாதுகாப்பு படையினரிடம் பேரம்பேசி அவர்களை மீட்கவும் உதவினார்கள்.

    இப்போது கொழும்புக்கு தமிழர்கள் வர பாஸ் வேண்டும் என அரசு அறிவித்த போதும் கூட வவுனியாவில் உள்ள இராணுவ அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து பாஸ_ம் எடுத்து கருவாடு, புகையிலை லொறிகளில் கூட்டி வருபவர்களும் அதே முஸ்லீம்கள்தான்.

    இப்போது புதுசாக நாம் வன்னித்தமிழர்களுக்கு குரல்கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கு இல்லை. அந்த அப்பாவி மக்களுக்கு தெரியும் எம்மைப்பற்றி. சிறிலங்காவில் ஒவ்வொரு கிராமத்திலும் சுருட்டுக்கடை, புகையிலைக்கடை, சில்லறைக்கடை வைத்திருந்த அந்த மக்களுக்கும், எங்களுக்கு எழுத்தறிவித்த அந்த வடமாகாண ஆசிரியர்களுக்கும், கதிர்காமத்திற்கு நடை பயணம் போகும் போது முஸ்லீம் கிராமங்களில் தங்கி நின்று, ஒரு கவளம் தண்ணீர் குடித்துப்போன அந்த வன்னித்தமிழனுக்கும் தெரியும் சிறிலங்கா முஸ்லீம்களின் அன்பும, அரவணைப்பும்.

    ஆசிரியர்களாக, பொலீஸ் அதிகாரிகளாக, தபாலதிபர்களாக, நீதிமான்களாக எங்கள் ஊர்களில் கடமையாற்றி, எங்கள் வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து ஓய்வு நேரங்களில் எங்களுக்கு ஆங்கிலமும், பஞ்சதந்திரக் கதைகளும் சொல்லித்தந்த அந்த மாமனிதர்களுக்கு தெரியும் சிறிலங்கா முஸ்லீம்களின் மதமும், மந்திரமும்.

    படித்த பட்டதாரி ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றாராம். கிராமத்தில் ஒரு குடிசைக்கு முன்னால் ஒரு மாடு சூடு மிதித்துக்கொண்டிருந்ததாம். மாட்டிற்குப் பக்கத்தில் யாருமே இல்லையாம். இவர் மாட்டிற்குப் பக்கத்தில் போய் பார்திதிருக்கின்றார். யாருமே இல்லை. இவர் உடனே குடிசைக்குப் பக்கத்தில் போய் எட்டிப் பார்த்திருக்கின்றார். அங்கே கிராமத்தான் சாக்குக் கட்டிலில் படுத்து பாட்டுப்பாடிக் கொண்டிருந்திருக்கின்றான். இவர் உடனே அவனை தட்டி கூப்பிட்டு நீ இங்கே படுத்துக் கொண்டிருக்கின்றாயே! மாடு தனியே சுற்றிக் கொண்டிருக்கிறதே! அது சுற்றாமல் நின்று விட்டால் வேலை நடக்காதே! என்றிருக்கிறார். அதற்கு கிராமத்தான் அதற்காகத்தான் அதன் கழுத்தில் மணிகட்டியுள்ளேன். அது சுற்றாமல் நின்றால் மணிச்சத்தமும் நின்று விடும். நான் எழும்பிப்போய் மாட்டை மீண்டும் சுற்றவிடுவேன் என்றானாம். மாடு ஒரே இடத்தில் நின்று கொண்டு கழுத்தை ஆட்டினாலும் மணிச்சத்தம் கேட்குமே அப்போது என்ன செய்வாய் என படித்தவர் கேட்டுள்ளார். ஐயா அதை நான் அந்த அளவுக்கு படிக்க வைக்கவில்லை. அதற்கு கள்ளம் கபடம் தெரியாது என்றானாம்.

    அது போல் அந்த மக்களுக்குத் தெரியும் பாதை திறந்தவுடன் வரும் முதல் வாகனம் முஸ்லீம்களுடையதாகத்தான் இருக்கும் என்று.

    மொனறாகலை, பிபிலை, பதியத்தலாவ, பதுளையிலிருந்து சுருட்டு, புகையிலை, சின்ன வெங்காயம், உறுண்டைகிழங்கு வாங்கவும் கண்டி, கொழும்பு, கேகல்லவிலிருந்து வாகனங்கள் வாங்கிவிற்கவும் நீர்கொழும்பு, புத்தளம், அனுராதபுரத்திலிருந்து கடலட்டை, நண்டு, கணவாய் என்பன வாங்கவும் துள்ளித் தெறித்து வந்து அந்த வன்னிமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தப் போகின்றவர்கள் இந்த முஸ்லீம்கள்தான் என்று அந்த வன்னி மக்களுக்குத் தெரியும்.

    மீண்டும் அந்த மக்களின் காலைவாரி, வடிவேல் பாணியில் உசுப்பேத்தி, உசுப்பேத்தி அந்த மனிதப்புனிதர்களை கொன்றுவிடாதீர்கள்.

    வெள்ளந்திரியான அந்த அப்பாவி வன்னி மக்களை, வேட்டை நாய்களாகப் பாவித்து, வேள்வித் தீ நடத்தி, இன்று வெட்கித்தலை குனியும் படியாக நாளுக்கு 20,30 என அரசகட்டுப்பாட்டு பகுதிக்கு கண்ணீரும் கம்பலையுமாகவரும் அந்த வன்னிமக்களுக்கு நாம் எப்போதும் துணைநிற்போம்.

    ஆனால் அனைத்தையும், அனைத்தையும் இழந்த அந்த யாழ்மாவட்ட முஸ்லீம்களுக்காக எப்போதாவது எந்த சந்தர்ப்பத்திலாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர், அல்லது ஒரு உறுப்பினர், குரல் கொடுத்தார்களா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வசீத்;” உங்கள் தாழ் பணிந்து “நன்றிகள். எவன் வசீத்தின் கேள்விகளையும் ஐயங்களையும் தீர்த்து வைக்கிறானோ அவனே! தமிழ் இனத்தை விடுவிக்கவல்ல சுகந்திரபுருஷ்சன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உண்மையில் இன்று புலிகளனின் இந்த அழிவிற்குக் காரணம் இலங்கை இராணுவத்தின் வியூகம் மட்டுமல்ல பல வருடப் பழமை வாய்ந்த புனித மடுமாதாவின் ஆத்திரமும் கூட. பிரபாகரன் தன் சுயநலத்திற்காக பலவருடங்களாக பீடத்தில் வீற்றிருந்த மாதாவை அங்கிருந்து அகற்றினார். இன்று அதற்குரிய பலாபலனை அனுபவிக்கின்றார். சும்மாவா சொன்னார்கள் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    ………………..”அனைத்தையும் இழந்த அந்த யாழ்மாவட்ட முஸ்லீம்களுக்காக எப்போதாவது எந்த சந்தர்ப்பத்திலாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் அல்லது ஒரு உறுப்பினர் குரல் கொடுத்தார்களா?”-வசீத்
    உங்கள் குற்றசாட்ட இப்படியிருக்க mohamed இதே தலைப்பில் இப்படி கூறியுள்ளர்.”1993 ம் ஆண்டளவில் பிபிசிக்கு பிரபாகரன் வழங்கிய பேட்டியில் ஏற்றுக் கொண்டார். அன்டன் பாலசிங்கமும் ஏற்றுக்கொண்டார். மறைந்த தமிழ் கூட்டமைப்பு எம்பி ரவிராஜ் கூட முஸ்லிம்களிடத்து இச் செயலுக்காக மன்னிப்புக் கோரினார்.”

    அதைவிட 2002ல் பிரபாகரனினால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டிலும் தொடர்ந்து ரவூப் கக்கீமுடனான சந்திப்பிலும் வருத்தம் தெரிவிக்கபட்டது. அதைவிட புலிகளிடமிருந்து பிரிந்த பின்னர் கருணா பிள்ளையான் முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டனர். நிற்க அஸ்ரப்பினால் தொடக்கி வைக்கப்பட்ட தென்தமிழீழ மக்களுக்கெதிரான கொடுமை இன்றுவரை அதாவுல்லாக்களினால் முஸ்லீம் ஆயுதகுழுக்கள் மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படை மூலம் சிங்களபடை ஆதரவுடன் கொலை கற்பழிப்பு (தமிழ் சிறுமிகள் உட்பட) கடத்தல் தமிழர் கிராமங்கள் ஆக்கிமிப்பு தொடர்கிறது. யாராவது ஒரு முஸ்லீம் தலைவர் இதற்காக வருத்தம் தெரிவித்தார்களா! இல்லை தடுத்து நிறுத்த முயற்சித்தீர்களா! தமிழனும் சிங்களவனும் மோதி எரியும் நெருப்பில் இன்னமும் எண்ணையூற்றி குளிர்காய்கீறீர்கள்.

    “தமிழ் இளைஞர் பேரவை காலத்திலிருந்தே வடகிழக்கில் உள்ள முஸ்லீம்கள் இலைமறை காய்களாக இளைஞர்களும் வியாபாரிகளும் சகல விடுதலை அமைப்புக்களுக்கும் உதவி செய்தார்கள்

    அப்போது நீங்கள் ஆயுதங்கள் வாங்க அல்லாடிய போதும் இந்தியாவுக்கு உங்களை பைபர்கிளாஸ் போட்டுகளில் ஏற்றி இறக்கவும் உங்கள் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தவும் உங்கள் உறுப்பினர்கள் பிடிபட்டால் பாதுகாப்பு படையினரிடம் பேரம்பேசி அவர்களை மீட்கவும் உதவினார்கள்.

    இப்போது கொழும்புக்கு தமிழர்கள் வர பாஸ் வேண்டும் என அரசு அறிவித்த போதும் கூட வவுனியாவில் உள்ள இராணுவ அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து பாஸூம் எடுத்து கருவாடு புகையிலை லொறிகளில் கூட்டி வருபவர்களும் அதே முஸ்லீம்கள்தான்”
    எப்பவும் பணபற்றாக்குறையுடன் அல்லாடி இயக்கங்களின் குறைந்தளவான பணகொடுப்பனவிற்கு இவ்வளவு குறுக்குவழி வேலை செய்தவர்கள் சிறிலங்கா இந்திய அரசுகளின் பெரும் பணகொடுப்பிற்காக என்னவெல்லாம் செய்திருப்பீர்கள் என்பது புலனாகிறது. உங்கள் உண்மை சொரூபத்தை உங்கள் வாயாலேயே ஒத்துகொண்டதற்கு நன்றிகள். இப்போ ஒன்று மட்டும் புரிகிறது தமிழன் மனிதத்தின் பெயரால் எல்லோரிடமும் ஏமாறுகிறான்.

    Reply
  • thambu
    thambu

    /எப்பவும் பணபற்றாக்குறையுடன் அல்லாடி இயக்கங்களின் குறைந்தளவான பணகொடுப்பனவிற்கு இவ்வளவு குறுக்குவழி வேலை செய்தவர்கள் (முஸ்லீம்கள்)சிறிலங்கா இந்திய அரசுகளின் பெரும் பணகொடுப்பிற்காக என்னவெல்லாம் செய்திருப்பீர்கள் என்பது புலனாகிறது./
    அப்படியெண்டால் முஸ்லீம்களை நீங்களும் முதலில் தேவைக்குப் பாவித்துவிட்டு பிறகு கலைச்சுவிட்டனீங்கள் எண்ட உண்மையை உங்கள் வாயாலேயே ஒத்துகொள்ளுறியள் தோழரே! நன்றிகள்

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    தம்பு அவர்களே! பணத்திற்கான குறுக்குவழி செயற்பாட்டாளர்களை எதிரி தேசத்தில் சட்டவிரோத காரியங்களில் ஒரு ராணுவ அமைப்பு பாவிப்பது வழமை. அது ஊடுருவல் உளவுவழங்கல்… என நீண்டு செல்லும். ஆனால் பணத்திற்கு விலைபோபவரை முழுமையாக நம்பி தன்னுடன் வைத்திருக்காது. அது ஆபத்தானது. காரியம் முடிந்தவுடன் கழட்டி விட்டுவிடுவார்கள். இது இராணுவ உளவு உத்தியின் பாலபாடம். புலியெனும் இராணுவ அமைப்பும் இதற்கு எக்காலத்திலும் விதிவிலக்காயிருக்க முடியாது.

    Reply
  • accu
    accu

    நடேசனின் முழுப்பூசனிக்காயை சோத்தில் மறைக்கும் பேட்டி ஒரு பக்கமிருக்க முழுத்தமிழ் சமூகமே வெட்கித் தலைகுனியும் செயலான முஸ்லிம் மக்களை யாழ்பாணத்தில் இருந்து துரத்திய கொடூரம் இன்னும் நிவர்தி செய்யப்படாத நிலையில் நடேசனின் பேட்டி எம்மாலேயே தாங்கமுடியாமல் இருக்கும்போது அச்சமூகத்தை சேர்ந்த வசீத் என்ற நண்பர் தனது மனக் குமுறலை மிக நாகரீகமாகவும் நட்புடனும் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் நண்பர் மாற்றுகருத்துதோழரோ முஸ்லிம் சமூகத்தையே தாழ்த்தி இப்பொழுது கொட்டியுள்ள இந்த இன வன்மம் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்திய செயலை விட இன்னமும் ஒரு படி மேலே தமிழ்ச் சமூகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

    நண்பரே //1993 ம் ஆண்டளவில் பிபிசிக்கு பிரபாகரன் வழங்கிய பேட்டியில் ஏற்றுக் கொண்டார். அன்டன் பாலசிங்கமும் ஏற்றுக்கொண்டார். மறைந்த தமிழ் கூட்டமைப்பு எம்பி ரவிராஜ் கூட முஸ்லிம்களிடத்து இச் செயலுக்காக மன்னிப்புக் கோரினார்.”//
    அவர் ஏற்றுக்கொண்டார் இவர் ஏற்றுக்கொண்டார் இவரும் மன்னிப்பு கேட்டார். இப்படி ஒற்றை சொற்களால் அந்தப் பெரிய கொடுமைகளெல்லாம் தணிக்கப்படுமா? நண்பர் வசீத் கேட்டது அனைத்தையும் இழந்த அந்த யாழ்மாவட்ட முஸ்லீம்களுக்காக எப்போதாவது எந்த சந்தர்ப்பத்திலாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர், அல்லது ஒரு உறுப்பினர், குரல் கொடுத்தார்களா? என்று. ஏற்றுக்கொள்வது வேறு குரல் கொடுப்பது வேறு.

    அப்போ மகிந்த ஒட்டுமொத்த தமிழனை அழித்துவிட்டு பின் அதை ஏற்று மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? ஒன்றுமட்டும் உண்மை யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை ஒட்டுமொத்தமாக புலிகள் விரட்டும் போது அதை கைகட்டி மெளனமாய் அனுமதித்தால் தான் அதற்கு கடவுளின் தண்டனை போல் ஒட்டுமொத்த யாழ்ப்பாணத் தமிழனும் அதே புலிகளால் வரலாற்று இடப்பெயர்வு என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்தப்பட்டான்.

    மற்றுகருத்துதோழரே மீண்டும் தலைப்புக்கு வருவோம். //“யாழ்ப்பாண முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் இரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது பாரிய நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டார். இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்.//

    நடேசனின் இந்தக் கூற்றுக்கு உங்கள் பதில் என்ன???

    Reply
  • palli
    palli

    வசீத் அவகள் வையித்திது வலியென வையித்தியசாலைக்கு (பின்னோட்டம்) போனால் மாற்றுதோழர் (வையிக்தியர்) கல்லைதூக்கி காலில் போட்டு விட்டு இப்போது எங்கு வலிக்குதென இருக்கு தோழரின் பின்னோட்டம். தோழர் நாம் ஒன்றும் பரபரப்பை படித்துவிட்டு வந்து எழுதவில்லை. கண்ணால் பார்த்தவை. நண்பர்கள் அனுபவித்தது எமது காலத்தில் அங்கங்கே நடத்த தவறுகள் எமக்கு தெரிந்தவைகள் என்பதை புஸ்பராசாவின் எமது சாட்ச்சியமாக பின்னோட்டம் இடுகிறோம். வருங்கால சந்த்ததி இவர்கள் எல்லாம் புனிதர்கள் என நாம் ஏமாந்தமாதிரி அவர்களும் ஏமாந்துவிட கூடாது அல்லவா?? இந்த நேரட்தில் எமது (தமிழர்) அன்று கையால் ஆகாதனத்துக்கு தலைகுனிவதை தவிர வேறுஎன்ன செய்யமுடியும். இருப்பினும் வசீத்தின் பின்னோட்டத்தில் அவர்களது கண்ணீர் தெரிந்தது. தோழரின் ஓட்டத்தில் இன்னும் ரத்தவாடகைட்கான் மணக்கிறது.
    பல்லி

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    “நடேசனின் இந்தக் கூற்றுக்கு உங்கள் பதில் என்ன???”
    விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு அவர்கள் கூறும் காரணங்கள்தான் உத்தியோக பூர்வமானது. வேணுமென்றால் மற்றவர்கள் விமர்சிக்கலாம் தர்க்கிக்கலாம். ஆனால் எனக்கு தற்போது அதை கேட்பதை தவிர வேறெந்த மனநிலையுமில்லை. எனது கவலை இலங்கைதீவில் அழிக்கப்படும் தமிழினத்தின் மீட்சிபற்றியதுதான்.

    அதுசரி முஸ்லிம்களின் உரிமைகாகவென சொல்லி 18 முஸ்லிம் அமைச்சர்கள் சிங்களஅரசில் இருக்கிறார்கள் அதிலும் மீள்குடியேற்று அமைச்சர் பதவி அதாவுல்லாவிடம்தான் இருக்கிறது. அவர்களால் தாரளமாக யாழ் முஸ்லிம்களை மீள் குடியேற்றம் செய்ய முடியும்.. 1990ல் வலிகாமம் கிழக்கிலிருந்து சிங்களபடையால் துரத்தப்பட்ட 1 1/2 இலட்சம் மக்கள் இன்றும் சொந்த இடம்திரும்பமுடியாது அகதியாய் அலைகின்றனர். அதாவுல்லாக்களினால் முஸ்லீம் ஆயுதகுழுக்கள் மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படை மூலம் சிங்களபடை ஆதரவுடன் கொலை கற்பழிப்பு (தமிழ் சிறுமிகள் உட்பட) கடத்தல் தமிழர் கிராமங்கள் ஆக்கிமிப்பு தொடர்கிறது. இதுபற்றி ஏன் உங்கள் மனிதாபிமானம் பொங்கியெழவில்லை.

    Reply