“சாக்குப்போக்குக் காரணங்களைத் கூறாது நாட்டை முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கொரோனா வைரஸ் தொற்றின் பேராபத்து மையமாக மேல் மாகாணம் விளங்குகின்றது. இந்தநிலையில், இம்மாகாணத்தை 10 நாட்கள் மட்டும் முடக்கியிருந்த அரசு, அதை மீண்டும் திறந்துவிட்டுள்ளது.
இதனால் கொரோனாத் தொற்றுப் பரவல் நாடெங்கும் பரவும் அபாயம் உள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.
இதனைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும். சாக்குப்போக்குக் காரணங்களைத் தெரிவிக்காது முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி வழங்க வேண்டும். அந்தக் காலப்பகுதிக்குள் நாடெங்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளையும் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வேகமாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்றமையை பலரும் சுட்டிக்காட்டிவருகின்றனர். குறிப்பாக இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.