“நாம் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்த போதிலும் எமது பிரதமர் மக்கள் சேவை செய்யும் வாய்ப்பினை எனக்கு பெற்று தந்துள்ளார்” – விநாயகமூர்த்தி முரளிதரன்

“நாம் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்த போதிலும் எமது பிரதமர் மக்கள் சேவை செய்யும் வாய்ப்பினை எனக்கு பெற்று தந்துள்ளார்” தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வேப்பையடி பகுதியில் பிரதமரின் இணைப்பாளர் அலுவலகத்தை இன்று(11.11.2020) காலை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களிடம் உரையாற்றும் போது மேற்கண்டவாறு விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.

அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரை விரட்டியடித்து நாம் தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளோம். குறிப்பாக கல்முனை பகுதியில் 89 வீதம் வாக்குகளை பெற்றமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எம்மை பாராட்டினார். கல்முனை தொகுதி மக்களிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பொத்துவிலில் சிறிய மாற்றம் இருந்திருந்தால் நாம் நிச்சயம் வென்றிருப்போம். தேர்தலின் பின்னர் நான் ஓடி ஒளிந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். நிறைவாகும் வரை மறைவாக இருக்க வேண்டுமென சொல்வார்கள். அதற்காக சிறிது இடைவெளி ஏற்பட்டது.

இருந்த போதிலும் நாம் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்த போதிலும் எமது பிரதமர் மக்கள் சேவை செய்யும் வாய்ப்பினை எனக்கு பெற்று தந்துள்ளார். இந்த அடிப்படையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை என்னை நம்பி ஒப்படைத்துள்ளார். இந்த அதிகாரங்களை பயன்படுத்தி மேலும் பல மாற்றங்களை இந்த பிரதேசங்களில் கொண்டு வருவேன்.

மக்களுக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும். தேர்தலுக்காக மாத்திரம் நாம் மக்களை ஏமாற்ற கூடாது. எனக்கு கிடைத்த அதிகாரம் மிக்க பதவி ஊடாக மக்களிற்கு உதவி செய்வேன். இதற்கு தற்போது தடையாக உள்ளது கொரோனா நோய். இந்த நோய் காரணமாக அமைச்சுக்கள் செயலிழந்து உள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்று தோல்வியடைந்த கலையரசன் என்பவருக்கு தேசிய பட்டியல் கொடுத்துள்ளது. அவர் வாகனத்தில் பவனி வருகின்றார். அவர் ஒரு வேலைத்திட்டம் அம்பாறையில் செய்தால் நான் திரும்பிச்சென்று இருப்பேன். ஒன்றுமே செய்யபோவதில்லை. மக்களை ஏமாற்றவே இருப்பை தக்க வைக்க முயல்கின்றனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது குழப்பம். கலையரசனுக்கு பதவி வழங்கியதால் கூட்டமைப்பின் செயலாளரின் பதவி பறிபோனது. எங்கள் அம்பாறை மாவட்ட மக்களை எமது இதயத்தில் இருந்து பிரிக்க முடியாது. நானும் கைவிட்டு போக மாட்டேன் என கூற விரும்புகின்றேன்.

அம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும். இதனை ஒரு இனவாதமாக எவரும் பார்க்க கூடாது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று எமது மக்கள் அவர்களுக்கு சாட்டை அடி கொடுத்துள்ளனர். எனவே தான் எதிர்வரும் தேர்தல்களில் எம்முடன் ஒரே சின்னத்தில் இணைந்து போட்டியிட கோடிஸ்வரன், கலையரசன் ஆகியோர் உணர்ந்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கல்முனை விவகாரம் பற்றி பிரதமரிடம் பேசினேன். துறைசார்ந்த அமைச்சர் சரத் வீரசேகரவிடமும் பேசினேன். கொரோனா முடிந்ததும் அவர் கல்முனைக்கு வருவார். கொரோனா முடிந்ததும் முதலாவதாக கல்முனையை தரமுயர்த்துவோம் எனவும் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *