“கொரோனா எவ்வளவு கடுமையானதோ அதை விட மக்களின் பசி கடுமையானது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் ” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் இன்று(11.12.2020) பாராளுமன்றத்தில் உறையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் பாராளுமன்றத்தில் தெரிவிக்கையில்,
“அரிசி விலை குறைப்பதாகக் கூறினார்கள், பருப்பு, சமன் மற்றும் சீனியின் விலையை குறைப்பதாகக் கூறினார்கள். போட்டிபோட்டு வர்த்தமானி பத்திரங்களை வெளியிட்டார்கள். ஆனால், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலைப் போன்று விலை அதிகரிக்குமென்றால் குறைகின்றது. விலை குறையுமென்றால் அதிகரிக்கிறது.
பொருட்களை விலை குறைப்பு குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் போது முழு நாட்டு மக்களும் கட்டாயம் பொருட்களின் விலை அதிகரிக்கப்போகின்றது என்பதை தெரிந்துகொண்டார்கள். விசேடமாக பிரதமரிடம் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். கொரோனா என்பது கடுமையானது என எம் அனைவருக்கும் தெரியும். ஆனால், மக்களின் பசியும் கடுமையானது என்பதை ஞாபத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பொது மக்களின் பசியை புரிந்துகொள்ளாத அரசாங்கம் என்பதை இன்று நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.