‘வெளிநாடுகளில் இருந்து அரசாங்கம் பெறும் குறுகியகால கடன்களால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் மோசமான கடன் நெருகடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமையே உருவாகும்” எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (11.11.2020) இடம்பெற்ற 2020ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் சர்வதேச கடன்களை சமாளிக்க அமெரிக்காவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலரையும் சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலரையும் பெற்றுக்கொள்ளவுள்ளது. மேலும் இந்தியாவிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலரையும் அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.
மேலும், நாட்டின் சகல துறைகளும் தற்போது வீழ்ச்சி கண்டுள்ள நிலையிலும் நாடு மீட்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்கின்றது.
இதேவேளை, நாட்டில் பொய்யான தரவுகளைக் கூறி சர்வதேச முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது . நாட்டின் கடன் நெருக்கடி மோசமான நிலையில் தலைதூக்கியுள்ளதுடன் கையிருப்பு 5.8 வீதத்திற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும், தற்போது அரசாங்கம் குறுகியகாலக் கடன்களைப் பெற்று நிலைமைகளைச் சமாளிகின்றது. எனினும், இவ்வாறான குறுகிய காலக் கடன்களினால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் மோசமான கடன் நெருகடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமையே உருவாகும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.