‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.இந்த நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் பாரிய தோல்வியொன்றைச் சந்திக்கும்” என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம், நேற்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கடந்த தேர்தல் காலத்தின்போது பலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. சுதந்திரக் கட்சி சார்ந்தவர்கள் மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.
பருத்தித்துறையில் இவ்வாறு பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவரின் பதவி கடந்த ஓகஸ்ட் மாதம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் உள்ள பட்டியலில் அவரின் பெயர் இருந்ததாகவும் பின்னர் வந்த பட்டியலில் இல்லையென்றும் அவர் இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதுபோன்று 600ற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன. வடபிராந்திய போக்குவரத்துத் திணைக்களத்தில் தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்தல் காலத்தில் தமக்குப் பணியாற்றியவர்கள் இவ்வாறு பதவியில் இணைக்கப்படுகின்றனர்.
இரண்டு அரசாங்கங்களும் மாறி மாறி இவ்வாறான செயற்பாடுகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட செலவீனங்களையும் தாண்டிய சட்டவிரோதமான செலவீனங்களுக்கும் சேர்த்து அங்கீகாரம் பெறுவதற்கு விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற வடமாகாண போக்குவரத்து சபையானது சீரழிந்து வருகிறது. ஏதாவது விபத்தொன்று இடம்பெற்றால் இதற்கான தீர்ப்புக்காக சம்பந்தப்பட்ட சாரதிகள் கொழும்புக்கு அனுப்பப்படுகின்றனர். ஏனைய மாகாணங்களில் அவ்வாறு இல்லை. வடமாகாணத்தின் கல்வி நிலைமை மோசமாகியுள்ளது. கல்வி நிர்வாக சேவையின் வகுப்பு ஒன்றைச் சேர்த்த வடபகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை.
பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் ஆக்குகின்றோம் என்ற போர்வையில் பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் நிலைமைகள் காணப்படுகின்றன. மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள முன்பள்ளிகளுக்கு வசதிகள் எதுவும் இல்லை. இவ்வாறான நிலையில் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் முன்பள்ளிகளை அமைத்து ஆசிரியர்களுக்கு சம்பளங்களை வழங்கி அவற்றை நிர்வகித்து வருகிறது.
மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள விடயம் வேண்டும் என்றே சீரழிக்கப்படுகின்றன. இந்த மாதிரியான முறைகேடான செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும். யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடபகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் பாரிய தோல்வியொன்றைச் சந்திக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.