“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(15.11.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியமைத்து ஒருவருடம் பூர்த்தியாகிவிட்டது. ஆனால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இன்னும் நிறைவேற்றவில்லை. தேசிய பாதுகாப்பு மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டனர். மேலும் சுபீட்சமான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தனர். இதுவரையில் அதில் எதனையாவது செய்துள்ளார்களா?
நல்லாட்சி அரசுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி என்பன கொள்கை அடிப்படையில் காணப்படுகின்றன. ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவோம் என்று கூறினர். ஆனால், பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய இலங்கையிலுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராகக்கூட இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைவர்கள் ஆளும் தரப்பினருடனும் தொடர்பில் இருக்கின்றமையே இதற்குக் காரணமாகும். ஆளும் தரப்புக்கும் இந்தச் செயற்பாடுகளுடன் தொடர்புள்ளது என்று கூறுவதற்கு நாம் பின்வாங்கமாட்டோம்.
உயிர்த்த ஞாயிறு தினத் தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவம் எம் மீது சுமத்தப்பட்ட மற்றைய குற்றச்சாட்டாகும். இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த விசாரணைகள் அனைத்துமே ஒரு பகுதியில் மாத்திரமே இடம்பெற்று வருகின்றன. அதாவது வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றும் தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் மாறுபட்ட கோணத்தில் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமை, 2017ஆம் ஆண்டு காத்தான்குடியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவரைக் கைதுசெய்திருக்க வில்லை. அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். அவருக்கு உதவி வழங்கிய நபர்கள் யார்? இதேவேளை, இவருடன் தொடர்பைப் பேணிய ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தொடர்பிலும் கூறப்படுகின்றது. அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளலாம்தானே.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினருடன் இலங்கையில் சிலர் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவ்வாறான 45 நபர்கள் தொடர்பிலும் வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவு தகவல் வழங்கியிருந்தது. எனினும், அது தொடர்பில நடவடிக்கை எடுக்காமைக்குக் காரணம் என்ன? இந்த விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்த வேண்டும்” என்றார்.