எத்தியோப்பியாவில் டைக்ரே மாகாணத்தில் உள்ள கிளர்ச்சி படையினருக்கும், அரசுப்படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இந்த மோதலில் டைக்ரே மாகாண படையினர் பலர் உயிரிழந்து வருகின்றனர். அதேவேளை எத்திய அரசுப்படையினரும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உள்நாட்டு சண்டையின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் பனிஷாங்குல் – குமுஸ் மாகாணத்தில் மிடகேல் பகுதியில் நேற்று இரவு ஒரு பேருந்தில் 35-க்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது, அந்த பஸ்சை இடைமறிந்த ஒரு நபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு பேருந்தில் இருந்த பயணிகளை குறிவைத்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து தப்பிச்செல்ல முயற்சி செய்தனர். ஆனாலும், இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் உயிரிழந்ததாக எத்தியோப்பிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபர் யார்? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் டைக்ரே மாகாணத்தை சேர்ந்த யாரேனும் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.