“ஜனாதிபதியை பதவியில் அமர்த்திய தரப்புக்குக் கூட, பாற்சோறு சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது” – எஸ்.எம். மரிக்கார்

“ஜனாதிபதியை பதவியில் அமர்த்திய தரப்புக்குக் கூட, பாற்சோறு சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது” என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று இலங்கையில் மறக்கமுடியாத ஒரு தினமாகும் .ஜனாதிபதி பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாட்டு மக்கள் கடுமையான வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதேவேளை மைத்திரி- ரணில் அரசாங்கம் தோல்வியடைந்த நிலையில், கடந்த வருடம் இதே போன்றதொரு தினத்தில்தான் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிபீடமேறினார்.

இவர் பதவியேற்று ஒருவருடம் கடந்துள்ள நிலையில், நாடே இன்று பாதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு செயற்பாடும் இலங்கையில் மேற்கொள்ளப்படவில்லை. மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியை பதவியில் அமர்த்திய தரப்புக்குக் கூட, பாற்சோறு சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த குறுகிய காலத்தில் 64 வீத மக்களின் வாழ்வாதாரம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருக்கும் மக்களுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்கவில்லை.

குறைந்தது அவர்கள் பெற்றுள்ள வங்கிக் கடன், வாகனக் கடனை பிற்போடக்கூட அரசாங்கம் முயற்சிக்கவில்லை. இவ்வாறு அனைத்து வழிகளிலும் அரசாங்கம் மக்களை கஸ்டத்துக்கே உட்படுத்தி வருகிறது.

2000 பில்லியனுக்கும் அதிகமான கடனை இந்த ஒரு வருடத்தில் மட்டும், அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது. இதேநிலைமை தொடர்ந்தால் 2024 ஆம் ஆண்டாகும்போது, நாடுபாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும்”  எனவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *