“நான் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். நீங்கள் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும்” – கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிக்கு ட்ரம்பை அழைக்கிறார் ஜோபைடன் !

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை அமெரிக்காவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் தாண்டி உள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் மீது புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
டெலாவேரில் உள்ள வில்மிங்டன் நகரில் ஜோ பைடன்  நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்கா விட்டால், இன்னும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும்.  கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் நானும், டிரம்ப்பும் ஒத்துழைத்துச் செயல்படாவிட்டால், அதிகமான அமெரிக்கர்கள் உயிரிழக்க நேரிடும்.
தடுப்பு மருந்து மிகவும் முக்கியமானது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரை கொரோனாவில் தப்பிக்க வாய்ப்பு குறைவுதான். ஆனால், தடுப்பூசி கண்டுபிடித்து நடைமுறைக்கு வந்துவிட்டால், மக்கள் எவ்வாறு தடுப்பூசியைப் பெறுவார்கள், 30 கோடி அமெரிக்க மக்களுக்கும் எவ்வாறு வழங்கப் போகிறீர்கள் எனும் திட்டம் ஏதும் இருக்கிறதா? அதற்காக அரசு என்ன திட்டத்தை வைத்துள்ளது?
மக்களுக்குத் தடுப்பூசி போடுதல் என்பது மிகப்பெரிய பெரிய பணி. முன்னுரிமை அடிப்படையில்தான் மக்களுக்குக் கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும். உலக சுகாதார அமைப்புடன் ஒத்துழைத்துதான் இந்தப் பணியை நம்மால் செய்ய முடியும். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமான வேகத்தில் செல்கிறது என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவிக்கிறது. தடுப்பு மருந்து நமது கைக்குக் கிடைத்தால் மட்டும் போதாது. அதை எப்படி மக்களுக்கு வழங்கப்போகிறோம். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் திகதி வரை காத்திருந்தால், எங்களின் திட்டம் தொடங்கிவிடும். இன்னும் ஒன்றரை மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
இப்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானது, டிரம்ப் எங்களுடன் ஒத்துழைத்துச் செயல்பட்டு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களிடம் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு எவ்வாறு வழங்குவது, ஒவ்வொருவருக்கும் எப்படி வழங்குவது, தொழிலாளர்கள், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியனர் அனைவருக்கும் எவ்வாறு வழங்குவது எனச் செயல்திட்டம் இருக்கிறது.
நான் உங்களிடம் கூறுவது என்னவென்றால், நான் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். நீங்கள் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும்’ என கூறி உள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *