அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர். டிரம்பின் குற்றச்சாட்டை தேர்தல் பாதுகாப்பு உயர் அதிகாரி கிறிஸ் கிரெப்சும் மறுத்திருந்தார். சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், நவம்பர் 3ல் நடந்த தேர்தல், அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது என்று கூறியிருந்தார்.
இதனால் மேலும் கோவப்பட்ட ஜனாதிபதி டிரம்ப், தேர்தல் அதிகாரி கிறிஸ் கிரெப்சை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். இதற்கான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டார் டிரம்ப். கிறிஸ் கிரெப்சின் பதவிநீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறி உள்ளார்.
‘தேர்தல் பாதுகாப்பு குறித்து கிறிஸ் கிரெப்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மிகவும் தவறானது. தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் நடந்துள்ளன. எனவே, கிறிஸ் கிரெப்ஸ் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்’ என டிரம்ப் மேலும் கூறி உள்ளார்.
ஏற்கனவே அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் மார்க் எஸ்பரை அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய ட்ரம்ப் அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் அப்பதவிக்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.