யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன்சிதம்பரநாதன் இளங்குன்றன் அவர் வசித்த வீட்டிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த மாணவன் கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியிலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் குறித்த மாணவன் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய சம்பவங்கள் எதுவும் நடந்திருக்கவில்லை எனவும், மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை சடலத்தைப் பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மயூரன், கழுத்து இறுகியதால் மரணம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.
எனினும், மாணவனின் இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸாரும் அவரின் இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இளங்குன்றனின் உடல் நேற்றிரவு யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.