எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது பெயரையும் கட்சியின் பெயரையும் கின்னஸ் புத்தகத்தில் பதிய வைக்க முயற்சித்து வருவதாக அரசதரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை வாய் மூல விடைக்கான வினாவொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் கூறியதாவது;
எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக 15 தேர்தல்களில் தோல்வி கண்டவர். அவரது கட்சியான ஐ.தே.க. அரசுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதும் வாபஸ் பெறுவதும் சாதனையாகிறது. இதனடிப்படையிலேயே ரணில் தனது பெயரையும் கட்சியின் பெயரையும் “கின்னஸ்’ புத்தகத்தில் பதிய வைக்க முயற்சித்து வருகின்றார். விரைவில் அவரது ஆசை நிறைவேறட்டும். அரசுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த ஐ.தே.க.வினர் அதனை விவாதத்திற்கு எடுத்திருக்க வேண்டும். ஆனால் அரசைப் பற்றி குறை கூறவோ குற்றம் சாட்டவோ எதுவும் இல்லாததாலேயே அவர்களால் அதனை விவாதத்திற்கு எடுக்க முடியவில்லை. இதனால்தான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதும் வாபஸ் பெறுவதுமாக ஐ.தே.க.தடுமாறிக் கொண்டிருக்கிறது.