“பாடசாலை செல்லும் மாணவர்களின் கழுத்தில் இடப்பட்ட சயனைட் குப்பியை அகற்றியவர் மகிந்தராஜபக்ஷ ” – அமைச்சர் ரோஹித் அபேகுணவர்தன  பாராட்டு !

“நல்லாட்சி அரசை ஆட்சிக்கு கொண்டுவர தமிழ் மக்கள் பெருமளவில் பங்களித்தாலும் அவர்களுக்கு என்ன கிடைத்தது? ” என அமைச்சர் ரோஹித் அபேகுணவர்தன  பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கொவிட்-19,யுத்தம்,எரிபொருள் பிரச்சினை எதுவுமின்றிய நிலையில் தான் 2015 இல் நாட்டை நல்லாட்சி அரசுக்கு மஹிந்த ராஜபக்ஷ கையளித்தார். ஆனால் ஆகஸ்டில் நடந்த தேர்தலில் 104 எம்.பிகள் தான் அவர்களுக்கு கிடைத்தது. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத் தேர்தலை வென்றார். அப்படியானால் யார் தோற்றது? நாமா அவர்களா? இன்னும் சில ஆண்டுகளில் உலகில் முன்னேற்றகரமான நாடாக எமது நாடு அபிவிருத்தி காணும்.

1,000 ரூபா சம்பள உயர்வு குறித்து வேலுகுமார் பேசினார். 2015 தேர்தலில் தமிழ் மக்கள் 80-, 90 வீதம் சில பகுதிகளில் அதனையும் விட அதிக வாக்குகள் அளிக்கப்பட்டன. நல்லாட்சி அரசினால் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு சலுகையை கூறமுடியுமா? 05 வருடத்தில் என்ன கிடைத்தது? நல்லாட்சியை உருவாக்க பங்களித்ததால் என்ன கிடைத்தது? என்று காட்டுங்கள். ஒரு தொழிலாவது வழங்கப்பட்டதா?

தமிழ் மக்களுக்கு நாம் செய்த அபிவிருத்தியை ஒருபக்கம் வைத்தாலும் பாடசாலை செல்லும் மாணவர்களில் கழுத்தில் இடப்பட்ட சயனைட் குப்பியை அகற்றியது யார்?. யுத்த அச்சமின்றி நிம்மதியாக வாழும் சூழலை யார் ஏற்படுத்தினார்கள்? என்றும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *