“யுத்தத்தால் அழிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்காக விசேடமான நிதி ஒதுக்கீட்டை நல்லாட்சி அரசாங்கம் உட்பட எந்த அரசாங்கமும் செய்யவில்லை” என வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டடுள்ளார்.
வவுனியாவில் நேற்று (19.11.2020) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இலங்கை-இந்திய ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வாக இல்லாவிட்டாலும், ஒரு ஆரம்பப் புள்ளியாக வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டது. இதன்படி, எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறுபட்ட நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் நோக்குடனேயே அதனை தோழர் பத்மநாபாவும் ஏற்றுக்கொண்டார்.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33 வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையிலே தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கமானது இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெற்ற சர்வதேச ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக மீறுகின்ற வகையிலேயே நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள், சொத்து அழிவுகளில் இருந்து தமிழ் மக்கள் காப்பற்றப்பட்டிருப்பார்கள்.
இதேவேளை, தற்சமயம் சிங்களப் பெரும்பான்மை மக்களுடைய வாக்குகளுடன் ஆட்சியில் உள்ள அரசாங்கமானது அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பூகோள அரசியல் போட்டிகளுக்குள் சிக்குண்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அரசாங்கம் மிகக் காத்திரமான ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையே ஒரு பரந்துபட்ட பலமான ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்ப வேண்டும். இவ்வாறு கட்டியெழுப்பப்படும் போதே, இந்தியாவோடும் ஏனைய சர்வதேச நாடுகளுடனும் இராஜதந்திர ரீதியாக அணுகி எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் இருப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.