வன்னியில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அரச படைகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் இடைநடுவில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் நிலைமை குறித்து ஐ.நா.செயலாளர் நாயகத்தின் சிறுவர்கள் மற்றும் ஆயுதமோதல்கள் விவகாரத்திற்குப் பொறுப்பான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமி விசனமும் கவலையும் தெரிவித்துள்ளார். இடம் பெயர்ந்திருக்கும் சிறுவர்கள் மற்றும் புலிகளால் போருக்குப் பயன்படுத்தப்படும் சிறுவர்களின் நிலைமை தொடர்பாக கவலை அடைந்திருப்பதாக ராதிகா குமாரசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
2008 இன் பின் அரையாண்டுப் பகுதியில் வட இலங்கையில் மோதல்கள் அதிகரித்திருப்பதால் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விடயங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து சிறுவர்களும் அவர்களின் குடும்பங்களும் இடம்பெயர புலிகள் அனுமதியளிக்க வேண்டும். அதேசமயம் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கான உதவிகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்று ராதிகா வலியுறுத்தியுள்ளார்.
இடம் பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்படும் எந்தவொரு முகாமும் சர்வதேச தரத்திற்கு அமைவானதாகவிருக்க வேண்டும். இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச உள்ளூர் மனிதாபிமான பணியாளர்களுடன் இலங்கை இணைந்து பணியாற்றவேண்டும் என்றும் ராதிகா கூறியுள்ளார். அத்துடன் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களை விடுதலைப்புலிகள் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் ராதிகா வேண்டுகோள்விடுத்திருக்கிறார். அவர்களின் வாழ்வைய் பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பான பேச்சுக்களில் அரசாங்கம் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ள ராதிகா அதிகாரிகளும் மனிதாபிமான நடவடிக்கையிலீடுபடுவோரும் இந்த சிறுவர்களை தத்தமது குடும்பங்களுடன் சேர்ப்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். சிறுவர்களை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்களே அடுத்த தலைமுறையினராகும் சாத்தியமான அளவுக்கு அவர்கள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியம் என்றும் ராதிகா கூறியுள்ளார்.