அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், தேர்தலில் மோசடி நடைபெற்றதாக தொடர்ந்து குற்றம்சாட்டினார். குறிப்பாக ஜோர்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகவும், அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை.
எனினும், ஜோர்ஜியா மாநிலத்தில், டிரம்புக்கும், பைடனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் இருந்தால் மறு வாக்கு எண்ணிக்கைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. இந்த முறை வாக்குகள் அனைத்தும் கைகளால் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் பைடன் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில செயலாளரின் இணையதளத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெற்றியாளரை இயந்திர வாக்கு எண்ணிக்கை துல்லியமாக தெரிவித்ததை, மறு வாக்கு எண்ணிக்கை உறுதிப்படுத்தியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோர்ஜியா மாநிலம் ஜனநாயக கட்சியின் வசம் சென்றுள்ளது. 30 ஆண்டுகளில் முதல்முறையாக வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் என்ற பெருமையை ஜோ பைடன் பெற்றுள்ளார்.