2020ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் வரும் நவம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகின்றது. டிசம்பர் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடர், ஹம்பாட்தோட்டை, சூரியவௌ மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ள மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில் மொத்தமாக 23 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் யாழ்ப்பாண பகுதியை மையப்படுத்தி கலந்து கொள்ளும் Jaffna Stallions அணியின் உரிமையாளர்களில் ஒருவராக Microsoft Ventures நிறுவனத்தின் நிறுவுனரும், அமெரிக்காவின் Seattle மாநிலத்தை தளமாகக் கொண்டியங்கும் தொழில்முனைவருமான Rahul Sood, இணைந்துள்ளார்.
Jaffna Stallions அணியின் வளர்ச்சியிலும் சர்வதேச ரீதியாக அதனைப் பிரபலப்படுத்துவதிலும் Rahul Sood முக்கிய பங்காற்றவுள்ளார் .
இது தொடர்பாக Jaffna Stallions அணியின் பிரதம மூலோபாய அதிகாரியான (Chief Strategy Officer) ஆனந்தன் ஆர்னல்ட் குறிப்பிடும் போது “Jaffna Stallions அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக Rahul Soodஐ வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சர்வதேச வர்த்தகத்திலும், புதிய தொழில் முயற்சிகள் ஆரம்பிப்பதிலும் அவருக்கு இருக்கும் அனுபவம் எங்களிற்கு பயனுள்ளதாக இருக்கும். எங்களது அணியை சர்வதேச ரீதியாக பிரபலப்படுத்துவதிலும் அதன் வளர்ச்சியிலும் Rahul Sood அளப்பரிய பங்காற்றுவார்” என தெரிவித்துள்ளார். .
இதே நேரம் , இந்தத் தொடருக்கான ஒளிபரப்பாளர்கள் உரிமையைப் பெற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளின் பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை சுயாதீனத் தொலைக்காட்சியான ஐ.ரி.என்., இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ், பாகிஸ்தானின் ஜியோ மற்றும் பி.டி.வி (Geo and PTV) ஆகிய அலைவரிசைகள் உரிமையைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.