“ஐரோப்பிய ஒன்றியத்தின் கேள்விகளுக்கு எமது மக்கள் கடந்த தேர்தலின் ஊடாக பதில் வழங்கியுள்ளனர்” என அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார்.
நேற்று (20.12.2020) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, வாசுதேவ நாணயகார மேலும் கூறியுள்ளதாவது,
“ ஐரோப்பிய ஒன்றியத்தின் கேள்விகளுக்கு எமது மக்கள் கடந்த தேர்தலின் ஊடாக பதில் வழங்கியுள்ளனர். மக்கள் ஆணையுடன் நாம் இதற்கான பதிலை கூறியுள்ளோம். இதேமக்கள் ஆணையுடன், அமெரிக்கா கொண்டுவந்த ஜெனீவா தீர்மானத்திலிருந்து நிச்சயம் வெளியேறினோம்.
எமக்கு கிடைத்த மக்கள் ஆணையை கொண்டே நாம் அவ்வாறான தீர்மானம் எடுத்தோம். ஆகவே எமக்குள்ள ஆணையின் பிரகாரம் இந்த தீர்மானத்திலிருந்து வெளியேறவும், இந்த நாட்டின் நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நாம் ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவை வைத்துக்கொள்வோம். ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவு வேண்டும் என்ற கோரிக்கையை நாம் நிராகரிக்கவில்லை. மேலும், இன்றுள்ள நெருக்கடியான நிலையில் 20 பில்லியன் ரூபாய் அதிகமான இறக்குமதிகளை செய்ய முடியாது என நாம் கூறுவதில் என்ன தவறுள்ளது. அவசியமான விடயங்களில் நாம் ஐரோப்பாவுடன் இணைந்து செயற்படுவோம்” எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.