“என்னை தோற்கடிப்பதற்காக பெரிய மருத்துவநிறுவனங்களும் , செய்தி ஊடகங்களும் செயற்பட்டன” என்ற குற்றச்சாட்டை டொனால்ட்ட்ரம்ப் முன்வைத்துள்ளார்.
உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ந் திகதி நடந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன், குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். 270 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலே வெற்றி என்கிற நிலையில், ஜோ பைடன் 306 வாக்குகளை பெற்றார். டிரம்புக்கு 232 ஓட்டுகளே கிடைத்தது.
ஆனால் டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது, தனக்கு எதிராக முன்னணி மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்ததாக புதிய குற்றச்சாட்டை சுமத்தினார்.
இதன் போது அவர் மேலும் கூறியதாவது:-
பெரிய மருந்து நிறுவனங்கள் எனக்கு எதிராக செயல்பட்டுள்ளன. எனக்கு எதிரான விளம்பரங்களுக்காக அவை கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளன. நான்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றேன். கிட்டத்தட்ட 7 கோடியே 40 லட்சம் வாக்குகளை நாங்கள் கண்டுபிடிப்போம். எங்களுக்கு எதிராக மருந்து கம்பெனிகள் செயல்பட்டன. ஊடகங்கள் எங்களுக்கு எதிராக இயங்கின. எங்களுக்கு எதிராக நேர்மையற்ற செயல்கள் நிறைய நடந்தன. இதுபோன்று நான் பார்த்ததே இல்லை” என கூறியுள்ளார் ட்ரம்ப்.
அதைத் தொடர்ந்து அமெரிக்க மக்களுக்கு மருந்துச்சீட்டுகளின் பேரில் வழங்கக்கூடிய மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கான விதிகளையும் அவர் அறிவித்தார். அப்போது அவர் கூறும்போது, “இதன் மூலம் நோயாளிகள் பலன் பெறுவார்கள். அவர்கள் மருந்துகளுக்கு அதிக விலை கொடுத்தார்கள். 51 ஆண்டுகளில் முதல் முறையாக மருந்துகளின் விலையை நாங்கள் குறைத்துள்ளோம். இதன் மூலம் 30 முதல் 50 சதவீதம் வரையில் மருந்து விலை குறையும்” என குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.