முல்லைத் தீவு புதுகுடியிருப்புக்கு மேற்கில் அமைக்கப்ப ட்டிருந்த புலிகளின் கண்ணிவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உட்பட பாரிய முகாம் தொகுதி ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.
முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியினர் உடையார் கட்டுக்குள காட்டுப்பகுதியில் புதுகுடியிருப்புக்கு மேற்கே அமைந்துள்ள இந்த முகாமை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பிரதேசத்தில் படைநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் இரண்டாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார தலைமையிலான படையினர் அங்கு பாரிய தேடுதலுக்கு மத்தியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கண்ணிவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை, கட்டளை பணியகம் பாதுகாப்பான பதுங்கு குழிகள், மண் அரண்கள் மற்றும் சில களஞ்சியசாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பாரிய முகாம் தொகுதியாகவே இது அமையப் பெற்றுள்ளது.
அதிசக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் மூலம் 3 வழி மின்சாரம் வழங்கப்பட்டுள்ள இந்த முகாமிலிருந்து ரி – 55 ரக சேதமடைந்த யுத்த தாங்கி – 01, பெருந் தொகையான கண்ணிவெடிகள், வெடிமருந்துகள், 81 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள், 61 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள், பெருந்தொகையான பிளாஸ்டிக் கலன்கள், இரும்பு போலைகள், பற்றரிகள், பெருந்தொகையான சிலிண்டர்கள், மற்றும் வயர்களையும் மீட்டெடுத்துள்ளனர். இது தவிர பெருந்தொகையான பி. வி. சி. குழாய்கள் மற்றும் இரும்பு குழாய்களையும், களஞ்சிய பகுதியிலிருந்து படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
இதேவேளை இராணுவத்தின் 57 வது படைப்பிரிவினர் தமது பாதுகாப்பு முன்னரங்குகளை மேலும் விஸ்தரித்துள்ளனர். அத்துடன் 574 வது படையினரின் கட்டளைத்தளபதி லெப்டினன்ற் கேர்ணல் சேனக விஜேசூரிய தலைமையிலான குழுவினர் நெத்தலியாறு பிரதேசத்தை ஊடுறுத்து விசுவமடுவின் மேற்கு எல்லை புரத்திற்குள் பிரவேசித்துள்ளனர். புதுகுடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் ஆறு சடலங்களையும் பெருந்தொகையான ரி – 56 துப்பாக்கிகளையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.